தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் ஆயில் அண்டு கேஸ் நிறுவனம், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் தொழிலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சில எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் 102 எண்ணெய் கிணறுகளை அமைத்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. இதே போல நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை ஒட்டிய கடலோர பகுதிகளில் 137 கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதையும் அக்கடிதத்தில் வேதாந்தா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதே விழுப்புரம், நாகப்பட்டினம், புதுச்சேரி பகுதிகளில் நிலப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தமிழக அரசிற்கு கடந்தாண்டு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி நிராகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது தனியார் நிறுவனமான வேதாந்தா அதே பகுதிகளில் கடலோர பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி கோரியுள்ளது. எனினும் offshore எனப்படும் கடல் மற்றும் அதை ஒட்டிய நிலப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வேதாந்த குழுமத்தின் ஒரு அங்கம்தான் ஸ்டெர்லைட் என்பதும் குறிப்பிடத்தக்கது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்