தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறவுள்ளது. இதில் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதும், 7ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் துறை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு, மகளிர் மாத உதவித் தொகை, பழைய ஓய்வூதிய ரத்து உள்ளிட்டவற்றை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டுள்ளது.
பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திற்கு மின்சார வாரியம் டெண்டர் ஒதுக்கியது குறித்தும், ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்து தொடர்ச்சியாக திமுக வைத்து வரும் விமர்சனத்தை எதிர்த்தும் இந்த கூட்டத்தொடரில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சொத்துவரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை மையப்படுத்தியும் பாஜக குரல் எழுப்பும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே நிதிநிலை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் கோடை வெயிலுக்கு நிகராக அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தொடர்கதையாகும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு - கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்