குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் குறித்த பயோமெட்ரிக் எனும் உருவ அடையாளங்களை பதிவு செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று, குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசியல் கைதிகளிடம் இருந்து பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார். மேலும் எந்தவொரு கைதிக்கும் உண்மை கண்டறியும் மற்றும் பாலிகிராஃப் பரிசோதனை நடத்தப்படாது என்றும் தெரிவித்தார். எனினும், இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்த அமித் ஷா, ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படாது என்றும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையின் திறனை அதிகரிக்கவே இம்மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இம்மசோதா அளிக்கும் அதிகாரத்தை காவல்துறையினர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மசோதாவை மேற்கொண்டு ஆய்வு செய்ய, அதனை தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்
ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே கடந்த திங்கள்கிழமை அன்று குற்றவியல் நடைமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக சட்டமாக மாறுவதற்கான ஒப்புதல் கேட்டு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்