ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் தேவைப்பட்ட ரன்கள் 22. அந்த அணி முக்கிய 5 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டியாவும், ரஷீத் கானும் களத்தில் இருந்தனர். ஜன்சென் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியதால், ஆட்டத்தின் எதிர்பார்ப்பு எகிறியது. எனினும் இரண்டாவது பந்தில் திவாட்டியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
3ஆவது பந்தில் ரஷீத் கான் சிக்ஸர் விளாச, கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 4ஆவது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படததால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எவ்வித நெருக்கடியையும் காட்டிக்கொள்ளாமல் கூலாக இருந்த ரஷீத் கான், கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசி குஜராத் அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தார்.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 65 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் விளாசினர்.
இமாய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் மறுமுனையில் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா அதிரடியாக அரைசதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
ஹைதராபாத் அணியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும், மற்ற வீரர்கள் ஜொலிக்கத் தவறியால் அந்த அணி வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.
கடைசிக் கட்டத்தில் திவாட்டியா 21 பந்துகளில் 40 ரன்களும், ரஷீத் கான் 11 பந்துகளில் 31 ரன்களும் விளாசி குஜராத் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 8 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 7 வெற்றிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க: ஹர்திக்கின் 'குஜராத் மாடல்' - அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்