திருப்பூரில் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் தேர்வு எழுத சென்றுள்ளார் பள்ளி மாணவியொருவர்.
திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் - கீதா தம்பதியினர். இவர்களது மகள் ரிதன்யா. இவர் திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவ்வருடம் பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த ரிதன்யாவுக்கு, கடந்த ஞாயிறன்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அது தொடர்பான நுண்துளை அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறுகிறது என்பதால், மருத்துவமனையில் இருந்த ரிதன்யா தானும் தேர்வு எழுத வேண்டும் என பெற்றோரிடமும், மருத்துவரிடமும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு!
மாணவியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, மருத்துவர் அறிவுரையின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, செவிலியர்கள் உதவியுடன் பள்ளிக்கு வந்து தேர்வினை தற்போது எழுதியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்