சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தற்போது ரவீந்திர ஜடேஜா உள்ளார். நடப்பு சீசனில் சென்னை அணி தொடந்து தோல்விகளை சந்தித்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. ஒரு வீரராக தன்னுடைய ஆட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் பொருட்டு கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கிறார் ஜடேஜா. இதனால் சென்னை கேப்டனாக மீண்டும் தோனி நாளைய போட்டி முதலே செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கேவின் தலைசிறந்த ஆல் ரவுண்டராக கொண்டாடப்பட்ட ரவீந்திர ஜடேஜா, நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவது சென்னை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நடப்புச் சாம்பியனாக இந்த தொடரில் நுழைந்த சென்னை அணி, தொடர்ந்து சொதப்பி வருகிறது. அறிமுக அணிகளிடமெல்லாம் தோல்வியுற்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறி விட்டது. ஒற்றை வரியில் தோனி பாணியில் சொன்னால் இதற்கெல்லாம் காரணம் “Too many holes in ship". அந்த Hole-இல் முக்கியமானது ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் ஆட்டம்.
அணியில் கெய்க்வாட் முதல் அனைவரும் சொதப்பி வரும் நிலையில் ஜடேஜாவும் காலை வாருவது தான் ரசிகர்களுக்கு இன்னும் கவலை அளிக்கிறது. ஆன் ஃபீல்டில் தோனி வழிநடத்துவது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்தாலும், சில தருணங்களில் அவர் கேப்டனாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். தவறுகளை தொடர்ந்து செய்கிறார். அது அவருக்கு அழுத்தமாக மாறி, அவருக்குள் இருக்கும் வீரரை மழுங்கடிக்கிறது என்ற விமர்சனத்தையும் நம்மால் மறுக்க முடியாது. அவரை தக்க வைக்க அணி செலவு செய்த அதிக தொகை கூட அவரது ஆட்டத்தை சீர்குலைப்பதாக ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் 6 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், மீண்டும் ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக ஃபார்முக்கு திரும்புவது சென்னை அணிக்கு மட்டுமல்ல! உலகக் கோப்பையை எதிர்நோக்கியுள்ள இந்திய 20 ஓவர் அணிக்கும் மிகவும் அவசியமானதும் கூட!
இந்த சூழலில்தான் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார் ஜடேஜா. இனியாவது அவருக்குள் இருக்கும் பிளேயரை ஆட்டத்தில் காணலாம் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: சிஎஸ்கே நம்பிக்கை தூண் ஜடேஜாவா இப்படி! நீங்களுமா சொதப்புகிறீர்கள் என வருந்தும் ரசிகர்கள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்