உலகின் பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காண, டென்மார்க் வாழ் இந்தியர்கள், நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக செவ்வாய்க்கிழமை டென்மார்க் நாட்டில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைகளில் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், தகவல்-தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு டென்மார்க் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சன், விமான நிலையம் சென்று வரவேற்றார். தொடர்ந்து இரு தலைவர்களும் ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசுகையில் உக்ரைன் விவகாரம் குறித்து இருநாடுகளும் ஆலோசித்ததாகவும், `உக்ரைனில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து இரண்டு பேரும், கூட்டாக டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நரேந்திர மோடி, “டேனிஷ் நண்பர்களே, இந்தியாவிற்கு வாருங்கள். பருவநிலை மாற்றம், புவி சார்ந்த பிரச்னைகள் போன்ற உலக பிரச்னைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண்போம். இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் தற்போது நன்றாக புரிந்து கொண்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அபரிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. இணையதள சேவையை பயன்படுத்துவதில் இந்தியா பன்மடங்கு உயர்ந்திருக்கிறது” என்றுகூறி அழைப்பு விடுத்தார்.
தொடர்புடைய செய்தி: "மனிதகுல பிரச்னைகளுக்கெல்லாம் இந்தியா எப்போதும் ஒரு தீர்வை காண்கிறது”- ஜெர்மனியில் மோடி
முன்னதாக பிரதமர் மோடிக்கு இசை வாத்தியங்கள் முழங்க நடனமாடி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதனை கண்டு உற்சாகம் அடைந்த மோடி, டிரம்ப்ஸ் இசைத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தொடர்ந்து டென்மார்க் ராணி இரண்டாம் மார்க்கெரத்தை , அவரது அரண்மனையில் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ள இமானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்