Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வருங்கால கணவர் ஒரு மோசடி பேர்வழியா? அசராமல் கைது செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

தனது வருங்கால கணவர் ஒரு மோசடி பேர்வழி என தெரியவந்த அசாம் பெண் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர், அவரை உடனடியாக கைது செய்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா. இவர் அதே பகுதியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர் வரன் தேடி வந்துள்ளனர். ஜுன்மோனி ரபாவும் மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார்.

image

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராணா போஹாட் (33) என்பவர் ஜுன்மோனி ரபாவுக்கு மேட்ரிமோனியில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இருவரும் தொலைப்பேசியிலும், நேரிலும் ஒருவரையொருவர் பார்த்து பேசி பழகினர். ராணா போஹாட் தன்னை ஒரு அரசு மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) எனக் கூறியுள்ளார். ஜுன்மோனி ரபாவும் அதனை நம்பிவிட்டார்.

ஒருகட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களின் நிச்சயதார்த்தம் அதே ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. வரும் நவம்பர் மாதம் அவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

image

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜுன்மோனி ரபாவுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், "நீங்கள் திருமணம் செய்யப் போகும் ராணா போஹாட் பல மோசடி செயல்களில் ஈடுபட்டவர். அவரை நம்பாதீர்கள்" எனக் கூறி அழைப்பை துண்டித்துவிட்டார். ஜுன்மோனி முதலில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத போதிலும், அதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்தார். அதன்படி ராணா போஹாட்டுக்கு போன் செய்த ஜுன்மோனி, அவரது பணிபுரியும் அலுவலகம் எங்குள்ளது எனக் கேட்டுள்ளார். அதற்கு போஹாட் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே உஷாரான ஜுன்மோனி, அதற்கு அடுத்தடுத்த நாட்களில் போஹாட்டுக்கு தெரியாமலேயே அவர் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டார்.

இதில் ராணா போஹாட், தன்னை ஒஎன்ஜிசி அரசு நிறுவனத்தில் உயரதிகாரி எனக் கூறிக்கொண்டு, அங்கு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளது ஜுன்மோனிக்கு தெரியவந்தது. அசாம் மட்டுமல்லாமல் மேகாலயா, மிசோராம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அவர் இதுபோன்ற ஏமாற்று வேலையில் ஈடுபட்டதும் அம்பலமானது. பின்னர் இதுகுறித்து ஜுன்மோனி தனது காவல் நிலையத்திலேயே புகார் அளித்தார். ஆனால், இது எதுவுமே ராணா போஹாட்டுக்கு தெரியாது. இதனைத் தொடர்ந்து, ஜுன்மோனி ரபா தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ராணா போஹாட்டை அதிரடியாக கைது செய்தனர்.

image

எந்த சமிக்ஞையும் இல்லாமல் தான் கைது செய்யப்பட்டதால் போஹாட் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வருங்கால கணவர் என்றும் பாராமல், மோசடி பேர்வழி என தெரியவந்ததும் அவரை கைது செய்த உதவி ஆய்வாளர் ஜுன்மோனி ரபாவுக்கு காவல் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்