தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதேபோல ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் இன்றே வெளியிடப்படுகின்றன.
கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் வகுப்புகள் காலதாமதமாக தொடங்கியதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9.30 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும், நண்பகல் 12 மணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அரசு அறிவித்துள்ள www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , www.dge1.tn.gov.in , www.dge2.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும், பதிவு செய்த செல்போன் எண்களுக்கு SMS வாயிலாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வுகள் துறை இயக்குநரகம் கூறியுள்ளது.
பள்ளிகள் வாயிலாகவும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி முடிவுகளை அறியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.22 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் சுமார் 1.95 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை. இதேபோல, 10 வகுப்பு பொதுத்தேர்வை எழுத 9.8 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில் 2.25 லட்சம் பேர் எழுதவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்