கடந்த 7 ஆண்டில் 414 ஆசிரியர் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கததாலும், தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டிற்கு பின்னர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாலும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருக்கிறது. இதனால் 7 ஆண்டுகளில் 414 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இணையாக போட்டிப் போட்ட ஆசிரியர் பட்டயப் பயிற்சி தற்போது மாணவர் சேர்க்கையின்றி இருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் 2015ம் ஆண்டில் 402 சுயநிதி ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் 25,200 என இருந்த மாணவர்களுக்கான இடம், தற்போது 2022ம் ஆண்டில் 33 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1950 மாணவர்கள் சேர்ப்பதற்கு மட்டுமே என்ற அளவில் குறைந்துள்ளது. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும், சுமார் 369 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத்துறையில் 2022 ஏப்ரல்-30 ம் தேதி வரையில் இடைநிலை ஆசிரியர்கள் பணியை முடித்த 1,84,470 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3,58,795 பேரும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் 2,68,350 பேரும் வேலைக் கிடைக்குமா என காத்திருக்கின்றனர்.
மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு தமிழகத்தில் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 12 ஆக குறைத்த கடந்த 2018 ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அப்போது 2018 ஜூன் மாதம் 28 ந் தேதி தமிழக சட்டப்பேரவை விதி எண் 55ன் கீழ் அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கோவி.செழியன் ஆகியோர் அவசரப் பொது முக்கியத்துவம் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர். மேலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.
அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மேலும் இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்களும் வெகுவாக குறைந்துள்ளதன் அடிப்படையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர்ள் சேருவதற்கு விரும்பம் காட்டுவதில்லை எனவும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் எடுத்துக் கூறினார். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்துள்ளதால், மூடப்பட்டுள்ள 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுமா எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா எனவும் ஏக்கத்துடன் இடைநிலை ஆசிரியர் காத்திருக்கின்றனர்.
கடந்த 2015 ம் ஆண்டில் 30 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 39 அரசு உதவிப் பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இருந்தன. ஆனால் கடந்த 2022 ம் ஆண்டில் 12 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 6 வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், 13 அரசு உதவிப் பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 33 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இப்படியாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 12 ஆக குறைத்த கடந்த 2018 ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதனால் கடந்த 2015 ம் ஆண்டில் 402 ஆக தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த கல்வியாண்டில் 33 என குறைந்தது. அதேபோல் கடந்த 2015 ம் ஆண்டில் 39 ஆக இருந்த அரசு உதவிப் பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த ஆண்டில் 13 ஆக குறைந்துள்ளன. இதனால் கடந்த 2015 ம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை மட்டும் 414 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்பொழுது 12 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1100 இடங்களும், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 440 இடங்களும், 13 அரசு உதவிப்பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1100 இடங்களும், 33 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1950 இடங்களும் (மொத்தமாக 4,890 இடங்களில்) மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
செய்தியாளர்: எம்.ரமேஷ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்