கொல்கத்தா ரயிலில் வந்த ஆந்திர பயணியிடம் கணக்கில் வராத 78 லட்சம் ரூபாய் பறிமுதல். ஹவாலா பணமா என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை.
கொல்கத்தா ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அவரது கையில் இருந்த பையில் 78 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் இருந்தது. பின்னர் அந்த நபரை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர் ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரை சேர்ந்த வேங்கட சதீஷ்(36) என்பது தெரியவந்தது.
மேலும் விஜயவாடாவில் இருந்து டிக்கெட் எடுக்காமல் சென்னை சென்ட்ரல் வரை ரயிலில் பயணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கு உண்டான சரியான ஆவணங்கள் சதீஷிடம் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 78 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது சதீஷ் கொண்டுவந்த 78 லட்ச ரூபாய் பணம் ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்