''ஒட்டுமொத்த தமிழர்களையும் திமுக பக்கம் ஈர்க்கும் நோக்குடன் நாம் செயல்படவேண்டும்'' எனக் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயம் கலைஞர் அரங்கில் ‘கலைஞர்-99’ கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நடைபெற்றது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மேடையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''நான் இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் இளைஞரணி சார்பில் நடத்தப்படுவதால் பெருமையாக உள்ளது. திமுகவில் 25 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்த்துள்ளீர்கள். அதில் 4 லட்சம் பேர் இரு முறை பதிவு செய்துள்ளனர். எனவே 21லட்சம் பேர் தான் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
பயிற்சி பாசறையை உங்கள் பகுதியில் அரங்கத்தை ஏற்படுத்தி கூட்டம் கூட்டினால் போதும். இளைஞரணியினர் பெரிய அளவில் கூட்டங்களை நடத்தியாக வேண்டியதில்லை. வெறும் 100 பேரை வைத்து சிறிய அளவில் கூட்டங்களை நடத்தினால் தான் திமுகவின் கொள்கைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். கூட்டம் நடத்துவதன் உண்மையான பலன் கிடைக்கும். தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு திராவிட மாடல் பயிற்சி நடைபெறும். உறுப்பினர் சேர்க்கையில் முதலில் ஆய்வு செய்து, பின்னர் அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் பின்னர் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்படுவர். புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். திமுகவிற்கு மாற்று பாஜக என்கிறார்கள். அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை பாஜக கெளபீரம் செய்வதாக கூறுகிறார்கள். அதைப்பற்றிய அரசியல் புரிதலோடு நாம் இருக்கவேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களையும் திமுக பக்கம் ஈர்க்கும் நோக்குடன் நாம் செயல்படவேண்டும்.
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் எழுத்துகள் நம்மிடம் உள்ளன. கூடுதலாக திராவிட மாடல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் நம் தலைவரின் சாதனைகளும் உள்ளன. நம் கொள்கைகளை சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் நம் பணி. அதற்கான பாசறையை தான் தற்போது ஆரம்பித்துள்ளோம். என்னை சின்னவர் என்று அழைத்தார்கள், ஆம் உங்களை ஒப்பிடுகையில் நான் சின்னவன் தான். மோடிக்கு கிளாஸ் எடுத்தவர் நம் தலைவர். மோடியை மேடையில் வைத்து மாநில தேவை குறித்து கோரிக்கை வைத்தார். மோடிக்கு மேடையில் இருக்குபோதே கோரிக்கை வைத்த ஒரே முதல்வர் நம் முதல்வர் தான். இதுதான் திராவிட மாடல்'' என்றார்.
இதையும் படிக்கலாம்: `ஆதீன பாரம்பரியங்களில் இந்து அறநிலையத் துறை தலையிடாது’- அமைச்சர் தகவல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்