எஸ்பிரஸ்ஸோ காஃபி மெஷினை கண்டுபிடித்த ஏஞ்சலோ மோரியோண்டோவின் 171வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வித்தியாசமாக டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
யார் இந்த ஏஞ்சலோ மோரியோண்டோ?
1851ம் ஆண்டு இத்தாலி நாட்டின் துரின் பகுதியில் ஜூன் 6ம் தேதி பிறந்தவர்தான் ஏஞ்சலோ மோரியோண்டோ. பிரபலமான தொழில்முனைவோராக இருந்த ஏஞ்சலோவின் குடும்பத்தினர் புது புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மக்களை ஆச்சர்யப்படுத்துவதில் அவர்கள் தவறியதில்லை.
அதன்படி, ஏஞ்சலோவின் தாத்தா மது உற்பத்தி செய்யும் நிறுவனத்தை கண்டுபிடித்தார். அவரது காலத்திற்கு பிறகு மோரியோண்டோவின் தந்தை அதனை நடத்தி வந்ததோடு “Moriondo and Gariglio” என்ற சாக்லேட் நிறுவனத்தையும் உருவாக்கி அவரது சகோதரர்களுடன் இணைந்து நடத்தி வந்தார்.
19ம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் சாக்லேட் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பண்டமாக இருந்தது. அப்போது சாக்லேட் தொடர்பான பாணங்கள் மற்றும் காஃபியை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
இதனை உணர்ந்த ஏஞ்சலோ மோரியோண்டோ மிகப்பெரிய பாய்லரை கொண்ட எஸ்பிரஸ்ஸோ மெஷினை 1884ல் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் பெற்றிருந்தார். இதன் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு காஃபி போட்டு கொடுத்தால் வாடிக்கையாளரின் நேரத்தை மிச்சமாக்கி அவர்களை கவனத்தை பெறமுடியும் என்பதை தீர்க்கமாக நம்பினார். அதன்படியே நடந்ததோடு, போட்டியாளர்களை வாய்ப்பிளக்கவும் செய்திருக்கிறது மோரியோண்டோவின் கண்டுபிடிப்பு.
அதே ஆண்டில் இத்தாலியின் துரினில் நடந்த எக்ஸ்போ ஒன்றில் மோரியோண்டோ தனது எஸ்பிரஸ்ஸோ மெஷினை காட்சிப்படுத்தியிருந்தார். அப்போது அதனை முழுமையாக பார்வைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மோரியோண்டோவின் இந்த கண்டுபிடிப்புக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது.
பின்னர், 1885ம் ஆண்டு அக்டோபர் 23ல் பிரான்ஸின் பாரிஸில் பதிவு செய்த பிறகு எஸ்பிரஸ்ஸோ மெஷினுக்கு சர்வதேச காப்புரிமை பெற்றதை அடுத்து ஏஞ்சலோவின் எஸ்பிரஸ்ஸோ மிஷினுக்கு உலகளவில் மவுசு கூடியது. பின்னாளில் எஸ்பிரஸ்ஸோவின் காட் ஃபாதர் என்றும் ஏஞ்சலோ மோரியோண்டோ அழைக்கப்பட்டார். இத்தனை சிறப்புகளை பெற்றிருந்த மோரியோண்டோவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று டூடுல் வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்