கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த ஆண் காட்டு யானையின் உடலில் இருந்து தந்தங்களை திருடி விற்க முயன்ற 9 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் யானை தந்தங்களை சிலர் விற்க முயன்று வருவது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து எடுத்த கூட்டு நடவடிக்கையில் கோடதாசனூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் நாகராஜன் என்பவரது வீட்டில் வைத்து சட்ட விரோதமாக விற்க முயன்ற இரண்டு தந்தங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக நாகராஜனுடன் ஏழுசுழி கிராமத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி, ராமமூர்த்தி, பிரபு, குமரேசன், அஜித், ரஞ்சித் மற்றும் காரமடையை சேர்ந்த ஆறுமுகம், சிருமுகையை சேர்ந்த பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்துக் கிடப்பதை கண்டு அதன் சடலத்தில் இருந்து தந்தங்களை திருடி சென்று பதுக்கியுள்ளதும் தற்போது அதனை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து வன சட்டப்படி கைது செய்யப்பட்ட இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் யானையின் தாடை எலும்பு பகுதிகளை வனத்துறையினர் கைப்பற்றி வனத்துறையின் மருத்துவக்குழு மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே: கொலையை தற்கொலையாக மாற்றிய இன்ஸ்பெக்டர் - திருச்செந்தூரில் பணியிடை நீக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்