திமுக கவுன்சிலரின் தம்பியை கார் ஏற்றிக் கொல்ல முயற்சியா? கார் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் ஜேக்கப் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன்களான மணிகண்டன் (46), புழுதிவாக்கம் 186-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். அதேபோல் இரண்டாவது மகன் பர்மன் (42), முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்கள் இருவரும் அதே தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பர்மனின் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் வேலாயுதம் மற்றும் அவரது மனைவி ஹேமாவதி ஆகியோருடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தகராறு நடந்துள்ளது. இதையடுத்து, அங்கு வந்த கண்ணகி நகரைச் சேர்ந்த ஹேமாவதியின் உறவினர்கள் கூச்சலிட்டு பிரச்னை செய்தனர். சத்தம்கேட்டு வீட்டில் இருந்து வந்த பர்மன் சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால், ஹேமாவதியின் உறவினர்கள் குடிபோதையில் இருந்ததால் பரமனிடம் அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தகராறு முற்றிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று காலை, பர்மன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டபோது, அவரை பின்தொடர்ந்த வந்த கார் அவர் மீது திடீரென மோதியது. இதில், சற்று சுதாரித்த பர்மன் வாகனத்தை வேகமாக ஓட்டினர்.
ஆனால், அவரை பின்தொடர்ந்து வந்த கார், பொன்னியம்மன் கோவில் திருப்பத்தில் மீண்டும் வேகமாக பர்மன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பர்மன் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த ஆட்டோ மீது விழுந்து காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் நடைபெற்ற சண்டையின் நீட்சிதான் என தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வாகன பதிவெண்ணை வைத்து விசாரித்த போது அது, அதிமுக 195-வது வார்டு வட்ட செயலாளர் ராஜீ என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்த போது வினோத் என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காரை விற்று விட்டதாகவும், பெயரை மாற்றாமல் பயன்படுத்தி வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் வினோத்தை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்