“தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது. எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் உள்ளது. இதை நான் சவாலாகவே சொல்வேன். என்னை எதிர்த்து பேசுபவர்கள் முழுமையாக தமிழை பிழை இல்லாம் பேச முடியுமா..?” என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகி ஒருவரின் ஆயுர்வேத மருத்துவமனையை புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில் “இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி ஏற்றுக்கொள்கிறார். அந்த பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன், ஏனெனில் உண்மையான சமூக நீதி அவரை குடியரசு தலைவர் ஆக்கியதில் நிலைநாட்டப்பட்டுள்ளது, ஆனால் சமூக நீதி என்று பேசிக் கொண்டிருக்கும் சிலர் கூட அவருக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தது சமூக நீதியை பெயரளவில் மட்டுமே கொண்டுள்ளார்கள் என்பதற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் வாக்களிக்காமல் இருந்தது ஒரு உதாரணம்.
நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நமது தேசிய கல்விக் கொள்கை தேவை என்று கூறும்போது இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை எனக் கூறியிருந்தேன். அதைத்தான் தேசிய கல்விக் கொள்கையும் சொல்கிறது. இதில் முதல் மொழி நமது தமிழ் மொழி. நமது ஆரம்ப கால பாடத்தை நமது தாய்மொழியான தமிழில் கற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அதன் அர்த்தம். இது பெருமையான விஷயம்.
தாய்மொழி தாய்மொழி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களின் குழந்தைகள் கூட தாய் மொழியில் கல்வி கற்பது இல்லை. இன்னொரு மொழியை கற்பது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றுதான் நான் சொன்னேன். உடனே எனது இளையதளத்தில் “இந்தி இசை இந்திய திணிக்கிறார்கள்” என்பது போல விமர்சன பதிவுகளை பதிவிடுகின்றனர். தமிழகத்தில் ஏன் வாலை நீட்டுகிறார்கள் என கேட்கிறார்கள்..? வாலை மட்டுமல்ல என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும். நான் ஒரு தமிழச்சி. வேறு மாநிலத்திற்கு பணி நிமித்தமாக சென்றுள்ளேன்.
நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள். இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது. முழுவதுமாக நான் இங்கு இருப்பேன். அதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் உள்ளது. இதை நான் சவாலாகவே சொல்வேன். என்னை எதிர்த்து பேசுபவர்கள் முழுமையாக தமிழை பிழை இல்லாம் பேச முடியுமா..?
சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள் என்று தான் நினைக்கிறேன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மத்திய அமைச்சர் முருகனைக் கூப்பிட்டது தான் சிலருக்கு பிரச்சனை. அடித்தட்டில் இருந்து உழைத்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர் முருகன். அவர் மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வார். அவரை அழைத்ததில் ஒன்றும் தவறில்லை. இந்திய அரசாட்சியில் உள்ள ஒரு அமைச்சரை பட்டமளிப்பு விழாவிற்கு கூப்பிட்டு உள்ளனர்.
தமிழக உயர்கல்வி அமைச்சரின் பெயர் அழைப்பிதழ் இருந்ததா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பிதழ் பேர் இருந்தால் கூட சில நேரங்களில் அவர்கள் வருவது இல்லையே! கவர்னர்களுக்கு வேந்தர் என்ற ஒரு பொறுப்பு கொடுத்திருப்பதை அரசியல் ஆக்கி விடக்கூடாது எல்லாத்தையும் அரசியலாக பார்த்தால் மாணவர்களுக்கு என்ன தோன்றும்? பட்டமளிப்பு விழாக்களையே அரசியல் ஆக்கினால் மாணவர்களுக்கு என்ன தோன்றும்? அவர்களுக்கு நல்லதை விதையுங்கள் என்பதே எனது கருத்து. ஆளுநர்களுக்கு எப்போதும் உள்ள அதிகாரமே போதுமானது. கூடுதல் அதிகாரம் எல்லாம் தேவையில்லை. அதை மதியுங்கள் என்று தான் நான் சொல்கிறேன்” என்று தமிழிசை கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்