குடும்ப வறுமையை உடைத்து போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவில் வாழ்ந்துகொண்டிருந்த அங்கிதாவுக்கு நேர்ந்துள்ள இந்த முடிவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா சிங் (19). இவரை, ஷாரூக் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து உள்ளார். அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாரூக், கடந்த 22ஆம் தேதி இரவு 8 மணியளவில் அங்கிதாவை தொடர்புகொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அங்கிதா தனது தந்தையிடம் தெரிவிக்கவே, கொலை மிரட்டல் விடுத்த ஷாரூக்கிடம் மறுநாள் பேசுவதாக தந்தை கூறியிருக்கிறார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவில் மாணவி அங்கிதாவின் வீட்டிற்குள் நுழைந்த ஷாரூக், தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த அங்கிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அங்கிதா நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கிதாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் கொலையாளி ஷாரூக்கை போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயதிலேயே புற்றுநோயால் தனது தாயை இழந்த அங்கிதா போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்துள்ளார். தாயின் சிகிச்சைக்காக சொத்து, நிலங்களை எல்லாம் விற்று நிறைய செலவு செய்ததால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது அங்கிதாவின் குடும்பம். தந்தையின் ஒருநாள் வருமானம் ரூ.200 மட்டுமே. குடும்ப வறுமையை உடைத்து போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவில் வாழ்ந்து கொண்டிருந்த அங்கிதாவுக்கு நேர்ந்துள்ள இந்த முடிவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று அங்கிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அறிவித்தார். இந்த நிதியை அங்கிதா மருத்துவமனையில் இருக்கும்போது கொடுத்திருந்தால்கூட சிகிச்சைக்காக பயன்படுத்தியிருப்போம்; இப்போது இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என வேதனையுடன் புலம்பினார் அங்கிதாவின் தந்தை.
இதையும் படிக்க: சென்னை: ‘நீ ராசியில்லாதவ; ஏன் இவ்ளோ சாப்டுற’- கர்ப்பிணி மரண வழக்கில் மாமியார் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்