“எங்கள் ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது. நடப்பது முதல்வர் ஸ்டாலின் ஆட்சி” என கோவை புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா கடந்த பத்து நாட்களாக கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. 3 லட்சத்திற்கும் மேல் மக்கள் கலந்துகொண்ட இந்த புத்தகத் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இதன் நிறைவு விழாவான நேற்று, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “இந்த புத்தக கண்காட்சிக்காக, மாநிலம் முழுவதும் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. புத்தகங்களை பொறுத்தவரை, சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். கோவை மாவட்டம் எழுத்தாளர்களை அதிகம் கொண்ட ஊர். கொங்கு தமிழும் மரியாதையை கொண்ட தமிழும் இங்கு அதிகம். கலைஞர் கருணாநிதிக்கு அடைக்கலம் கொடுத்த மண் இது. எங்கள் ஆட்சியில் வேட்டியை கழட்டுவதற்கு யாரும் இல்லை. எங்கள் ஆட்சியில் அது நடக்காது. நடப்பது முதல்வர் ஸ்டாலின் ஆட்சி!” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், “கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஏராளமான மக்கள் இந்த இடத்தில் (கொடிசியா வளாகத்தில்) அனுமதிக்கப்பட்டிருந்தனர். எல்லா இடங்களிலும் மரண ஓலங்கள் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு நிலைமை மாறியுள்ளது. தற்போது இங்கு புத்தகத் திருவிழா நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக புத்தகம் எழுத எழுத்தாளர்கள் யாரும் முன் வரவில்லை. எழுதிய எழுத்துக்கள் விற்பனை செய்ய செலவாகும் என்பதால் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை தாங்களே வைத்துக் கொண்டு இருந்தனர்.
இதனை மாற்றும் பொருட்டு தமிழக முதல்வர் தன்னை காண வருபவர்கள் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி அனைவரும் முதல்வருக்கு புத்தகத்தை கொடுத்து வருகின்றனர். அந்த புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. இவையன்றி, நான் எழுதிய இரண்டு புத்தகங்கள் ஏற்கனவே தமிழில் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த வாரம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த இரு நூல்களும் வெளியிடப்பட உள்ளது” என தெரிவித்தார்.
இன்று கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. #masubramanian #TNHealthminister pic.twitter.com/p86mvuQOk1
— Subramanian.Ma (@Subramanian_ma) July 31, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்