வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் கடற்படை தளம் ஒன்றை நிறுவியுள்ளது சீன ராணுவம்.
சீனா உலகம் முழுவதும் தங்களுடைய ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 2016ஆம் ஆண்டில் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில், சீனா தன்னுடைய கடற்படைத் தளத்தை அமைக்கும் பணியை 590 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் தொடங்கியது. தற்போது இந்த பணி நிறைவடைந்து கடற்படைத் தளம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனப் போர்க்கப்பல்களுக்கு இது ஆதரவளிப்பதாகவும் செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
ஜிபூட்டியில் உள்ள சீனாவின் இந்த கடற்படைத் தளம் அதன் முதல் வெளிநாட்டு இராணுவ தளமாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வரும் நிலையில், ஜிபூட்டியில் நிறுவப்பட்டிருக்கும் இந்த கடற்படைத் தளம் சீனாவின் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம், சீனா உலகம் முழுவதும் அதனுடன் நட்பு கொண்டு உள்ள நாடுகளில் தன்னுடைய ராணுவ தளத்தை அமைக்க இன்னும் நாட்டம் காட்டும் என வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
சீனாவின் ஜிபூட்டி தளம் குறித்து கடற்படை ஆய்வாளர்ஒருவர் கூறுகையில், "ஒரு நவீன காலனித்துவ கோட்டையைப் போல, பல பாதுகாப்பு அடுக்குகளுடன், பலமான கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இது நேரடித் தாக்குதலைத் தாங்கும் வகையில் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.
இந்த ஜிபூட்டி கடற்படைத்தளம் மூலம் சீனா தனது ராணுவப் படைகளை நிலைநிறுத்தவும், எதிரி நாடுகளை உளவு பார்க்கவும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிபூட்டி தளம் மூலமாக இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 'சல்மான் ருஷ்டி உயிர்பிழைத்ததை நம்ப முடியவில்லை' - தாக்குதலில் ஈடுபட்டவர் பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்