புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி திடீரென உயிரிழந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரிழந்தவரின் கிராமத்தில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததாக இவரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு சின்னத்துரைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
சின்னத்துரையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதய பிரச்னைக்காக கடந்த மாதம் சின்னத்துரைக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கையில், மருத்துவச் சான்றிதழ் பெற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது எப்படி என்றும், இதில் ஏதேனும் தவறு நடந்துள்ளதாக என விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மாரடைப்பால் கைதி இறந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்