பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையில் எந்தவொரு சமரசமோ அல்லது திருமணம் செய்தலின் அடைப்படையிலையோ குற்றவாளியின் குற்றத்தை ரத்து செய்ய முடியாது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐபிசி மற்றும் போக்சோ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரின் வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளது. அவ்வழக்கில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி தனது வழக்கறிஞரின் மூலம் சிறுமியின் பெற்றோரிடம், சிறுமிக்கு 18 வயது நிரப்பியவுடன், தாமே திருமணம் செய்துகொள்வதாகப் பத்திரம் ஒன்றின் மூலம் ஒப்புதல் அளித்து சமரசம் செய்துள்ளார். இதனை மேற்கொள்காட்டி, தன் மீது இருக்கும் ஐபிசி மற்றும் போக்சோ வழக்குகளிலிருந்து விடுக்கும் மாறும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `‘பல போக்சோ வழக்குகள், இதுபோன்ற சமரசங்கள் என்ற பெயரில் நடக்கும் அபத்தங்களால் நீர்த்துப்போய்விடுகிறது. இதுபோன்ற சமரசங்கள் தொடர்ந்தால், எதிர்காலத்தில், பாலியல் குற்றம் செய்துவிட்டு சமரசம் செய்துகொண்டால் தப்பித்துவிடலாம் என்ற போக்கையே உருவாக்கும். சமரசங்கள் ஒருபோதும் குற்றங்களைச் சரிசெய்யாது. போக்சோவின் நோக்கத்தையே கேள்விக்குறியாகும் இதுபோன்ற சமரசங்களை ஏற்கமுடியாது’’ என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனூங்கோ, `‘இது போன்ற தீர்ப்புகள் தான் குழந்தைகளுக்கு உதவும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை எந்த காரணத்துக்காகவும் சமரசம் செய்துகொள்ள முடியாது’’ என தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்