அன்றாடம் ஏதேனும் விசித்திரமான விநோதமான நிகழ்வுகள் எப்படியாவது அரங்கேறி விடுகின்றது என்றாலும், சமூக வலைதள பயன்பாட்டால் இப்போதெல்லாம் அவை அனைத்தும் உடனுக்குடனே பொதுவெளியில் அறியப்பட்டு வருகிறது.
இப்படித்தான், லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் தற்செயலாக கூகுள் மேப் மூலம் பில்லியனில் ஒருவர் என்ற அதிசய நிகழ்வில் இணைந்திருப்பது தொடர்பான செய்திதான் தற்போது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது. சரியாக ஒன்பது ஆண்டு இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட கூகுள் மேப்பின் street view-ல் இருந்த பெண் ஒருவர், இப்போதும் அதே இடத்தில் அதேபோல நின்றுகொண்டு இருந்திருக்கிறார். அந்தச் சம்பவம் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
கடந்த 2009ம் ஆண்டு லண்டனின் விக்டோரியா பிளேஸ் பகுதியில் லீன் கார்ட்ரைட் என்ற பெண் ஒருவர் சாலையை கடப்பதற்காக சிக்னல் கம்பம் முன்பு கையில் ஒரு பையுடன் நின்றிருக்கிறார். அதேப் பெண் கடந்த 2018ம் ஆண்டு தன்னுடைய 41வது வயதில் அதே விக்டோரியா ப்ளேஸ் பகுதியில் கையில் பையுடன் சாலையை கடக்க அதே சிக்னல் கம்பம் முன்னாடி காத்திருந்திருக்கிறார்.
இந்த இரண்டு தற்செயலான சம்பவத்தின்போதும் அப்பெண் கூகுள் மேப்பின் street view-ல் தென்பட்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை இங்கிலாந்தின் கார்லிஸ்லே பகுதியைச் சேர்ந்த லீன் கார்ட்ரைட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியுள்ள லீன், “இது ஏதோ அந்த நொடியிலேயே உறைந்து போனது போல இருக்கிறது. அதே இடத்தில் அதே மாதிரி பையுடன் நடைப்பாதை அருகே நின்றிருக்கிறேன். இதை பார்க்கும் போது மிகவும் வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது. மக்களுக்கெல்லாம் ஏதோ நான் டைம் டிராவல் செய்தவர் போல இருக்கிறது. ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அதே இடத்தில் பிடிபட்ட ஒரே நபர் நான்தான். என் கணவர் ரிச்சர்ட்தான் இதனை முதலில் கண்டறிந்தார்.
அவர் வேலையில் இருந்த போது எதேர்ச்சையாக 2018ல் நடந்ததை கண்டவர் இதேப்போன்று 2009ல் இருந்ததையும் கண்டறிந்தார். முதலில் அந்த ஃபோட்டோக்களை பார்க்கும் போது விசித்திரமாகவே உணர்ந்தேன். இதுபற்றி அலுவலகத்தில் கூட கூறினேன்.
ஆனால் அவர்களை அதை வேடிக்கையாக பார்த்தார்கள். பின்னர்தான் ஃபேஸ்புக்கில் பகிர நினைத்தேன். ஏனெனில் இது எல்லோருக்கும் நடந்திருக்குமா என தெரியவில்லை. என்னுடைய பதிவுக்கு பலரும் லைக் செய்திருந்தார்கள். என்னை டைம் டிராவலர் என்றும் சிலர் கூறினார்கள். நான் மீண்டும் அதே இடத்திற்கு செல்வேனே எனத் தெரியவில்லை. ஆனால் விக்டோரியா ப்ளேஸை கடக்கும் போது இனி சிரிப்புதான் வரும்.” எனக் கூறியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்