கும்பகோணம் நகரப் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரிக்கும், மினிப் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், பழ வியாபாரியை கையால் குத்தி கீழே தள்ளியபோது பின் மண்டையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் நகரப் பேருந்து நிலையம் அருகே பழ வியாபாரம் செய்து வந்தவர் வினோத் (24). அந்தப் பேருந்து நிலையத்தில் மினிப் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்ப்பவர் தீனதயாளன் (26). இவர்கள் இருவரும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டபோது, தீனதயாளன் கையால் குத்தி தள்ளியதில் கீழே விழுந்த பழ வியாபாரி வினோத் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மினிப் பேருந்து ஓட்டுநரான தீனதயாளன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த கும்பகோணம் மாநகர மேற்கு காவல் நிலையத்தார், வினோத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாகிய மினிப் பேருந்து ஓட்டுநர் தீனதயாளனை தேடி வருகின்றனர். இருவர் மீதும் சிறு சிறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே முன் விரோதம் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்