Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயார்- அமைச்சர் சேகர் பாபு

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 1220 பேருக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா வழங்கினர்.

பின்னர் சென்னை முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பட்டாசு கழிவுகளையும் மற்றும் பழைய பொருட்களின் கழிவுகளையும் அகற்றியதற்கு அமைச்சர் சேகர்பாபு பாராட்டுகளை தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு , ‘முதலமைச்சர் உத்தரவிற்கு ஏற்ப சூரசம்ஹாரத்தை முன்னிட்டு ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்விசிறி, மின் விளக்குகள், மற்றும் குடிநீர், மருத்துவ வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்மறை கருத்துகள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்கள் கூட சிலர் என்னை தொடர்பு கொண்டு திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். வரலாற்றில் இல்லாத வகையில் 1200 கிமி அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் இவ்வளவு பெரிய பணி ஓராண்டில் முடியும் தருவாயில் உள்ளது.

இதையும் படியுங்கள் - தீபாவளியும் புருவ மழிப்பும்... தெலங்கானா பழங்குடி மக்களின் நூதன வழிபாட்டின் சிறப்பு!

image

ராணுவத்திற்கு நிகராக போர்க்கால அடிப்படையில் எந்த நிலையையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியை முதலமைச்சர் தயார்படுத்தி வைத்திருக்கிறார். பேரிடரை சமாளிக்க முதலமைச்சரின் உத்தரவில் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் தயார்’’ என்றார்.

மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜகவினர் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி பேசிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, ‘குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என இருப்பவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் இவ்வாறாக ஏதாவது பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் மக்கள் அமைதியாக நிம்மதியாக, ஜாதி மத இன மோதல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தீவிரவாதம் எங்கு தலை தூக்கினாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்