கத்தாரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து லீக் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றது. இதில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, ஈரான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் 6 : 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தனது புள்ளிக் கணக்கை தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி வீரர்களான பெல்லின்ஹாம், சஹா, ஸ்டெர்லிங், ரஷ்போர்ட், கிராலைஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஈரான் அணி வீரர் தரிமீ இரண்டு கோல்களை அடித்தார்.
நேற்றிரவு 9.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து அணியுடன் செனகல் அணி பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியின் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்காத நிலையில் சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் காக்போ தலையால் முட்டி தனது முதல் கோலை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து 90 +9 வது நிமிடத்தில் செனகல் கோல்கீப்பர் தடுத்து வந்த பந்தை நெதர்லாந்து வீரர் க்ளாசன் கோலாக்கினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 2 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற 3-வது போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் களம்கண்டன. முதல்பாதி ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணி வீரர் வேயா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் பேலே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தில் முடிவில் 1 : 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்