Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா?-அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என்பது தொடர்பான கருத்துக்களுடன், நவம்பர் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

image

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

image

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி முழுமையான அளவில் எல்.கே.ஜி முதல் அனைத்து வகுப்புகளை துவங்க தயாராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்துகளை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

image

இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துகளுடன் நவம்பர் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்