உதயநிதி ஸ்டாலின் தான் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என அமைச்சர்கள் சொல்வதை பார்த்து மக்கள் சிரிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
விக்ரம் சம்பத் என்பவர் எழுதிய BRAVEHEARTS OF BHARAT எனும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று புத்தகத்தை குறித்து பேசினார். மேலும், பார்வையாளர்கள் கேள்விக்கும் பதில் கூறினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ''ஜனநாயக நாட்டில் ஜனநாயக கட்சியாக விளங்கும் பாஜக போட்டியிட்ட 90 சதவீத இடங்களில் வெற்றி பெற்று குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறை ஆட்சி அமைப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதைத்தான் பிரதமர் மோடி, குஜராத்தில் பாஜகவின் வெற்றி ஒரு சகாப்தம் என்று கூறியுள்ளார். குஜராத்தில் தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய மணி நகர் பகுதியில் பாஜக 76 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
ஒரு கட்சி நல்ல ஆட்சியை கொடுத்தால் மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதற்கு குஜராத்தில் பாஜகவின் வெற்றி ஒரு உதாரணம் எனவும் கூறினார். ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் வெற்றி பெறாதது வருத்தம் அளிக்கிறது இதன் மூலம் சில பாடங்களை பாஜக கற்றுக் கொள்கிறது எனவும் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றது. அதன்படி தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 185 இடங்களில் ஆம் ஆத்மி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வெறும் 130 இடங்களே பெற்றுள்ளது. இதன் மூலம் இரண்டு வருடங்களில் பாஜக எந்த அளவு உழைத்து இருக்கிறது என்பது தெரிகிறது. ஆகையால் டெல்லியை பொருத்தவரையில் காங்கிரஸின் வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றதே அவர்களது வெற்றிக்கு காரணம் என கூறினார். காங்கிரஸ் கட்சி தன்னுடைய வாக்குகளை தக்க வைக்காதது தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு காரணம் எனவும் சுதந்திரத்திற்குப் பிறகு 75 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க்கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
ஆன்லைன் ரம்மி நிறுவன பிரதிநிதிகள் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்தது குறித்த கேள்விக்கு, அது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வரவில்லை என கூறிய அவர், ஆன்லைன் ரம்மி என்பது தடை செய்யப்பட வேண்டியது என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. ஆகவே தமிழக ஆளுநரின் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம் எனவும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் வேகமாக முடிவெடுப்பார் என்று நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்
கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய திருச்சி சூர்யா பாஜகவின் மூத்த நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு, அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறினார். பாஜகவை வளர்க்க கேசவ விநாயகம் எனக்கு தோள் கொடுத்து அரும்பாடுபடுவதாக கூறினார். தற்போது உள்ள இளைஞர்களுக்கு அவசரம் அதிகமாக உள்ளது. ஆனால் அரசியலில் அவ்வாறு செயல்பட முடியாது. பொறுமை மிகவும் முக்கியம் என, திமுக ஆட்சியை பிடித்ததை உதாரணம் காட்டி கூறினார்.
பாஜக தற்போது படிப்படியாக வளர்ந்து வருவதாகவும், எனவே பாஜகவில் உள்ள இளைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்; எதையும் எதிர்பாராமல் கடினமாக உழைக்க வேண்டும். வரவேண்டிய பதவி தேடி வரும் எனவும் கூறினார். அவசரப்பட்டு தரைக்குறைவாக யாரையும் பேசக்கூடாது, பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகனை பற்றியோ, கேசவ விநாயகன் பற்றியோ பேசுவதை நான் ஏற்று கொள்ள மாட்டேன் என கூறினார்.
தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தை இயற்கை பேரிடர்கள் அதிகம் தாக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை முதலமைச்சர் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். வல்லுனர்களை மாநிலத்திற்குள் கொண்டு வந்து பேரிடர் பணிகளை அடுத்த கட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார்.
பிரதமர் மீது தொடர்ந்து எதிரான கருத்துக்களை சுப்பிரமணிய சாமி பதிவு செய்து வருகிறார், பாஜகவில் உள்ள தலைவர்கள் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். ஆனால் தொடர்ந்து பிரதமரை தவறாக பேசுவதும் பாஜகவை பற்றி ஆட்சியை பற்றி தவறாக பேசுவது வேதனையாக உள்ளது. ஆனால் அவர் பாஜகவில் இருந்த தலைவர். ஆகையால் அவரை பற்றி நான் தவறாக பேசப் போவதில்லை. வருகின்ற காலத்தில் சுப்பிரமணிய சாமி தனது கருத்தை மாற்றி கொள்வார் என்கிற நம்பிக்கை தமக்கு உள்ளதாக கூறினார்.
உதயநிதி ஸ்டாலினை விரைவில் தமிழக அமைச்சராக்கப்பட உள்ளதாக சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு, உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவி வழங்க தான், ஆட்சிக்கு வந்த பின் 100 கோடி ரூபாய் செலவில் 3 படங்கள் எடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். மக்களின் அன்பு மற்றும் அரவணைப்பில் மக்களுக்காக தலைவன் உருவாக வேண்டும் எனவும் வற்புறுத்தி யாரையும் தலைவராக்க முடியாது எனவும் விமர்சித்தார். அதை ஜனநாயகமே ஏற்றுக் கொள்ளாது எனவும் கூறிய அவர் ஆனால் மக்களால் முதலமைச்சராக்கப்பட்ட மு.க ஸ்டாலினுக்கு யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்க உரிமை உண்டு.
இந்தியாவிலேயே சிறந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் முத்துசாமி கூறுகிறார். அவர் கும்மிடிப்பூண்டியை தாண்டியுள்ளாரா என கேள்வி எழுப்பினார். குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சர் முத்துசாமி சென்று பார்த்தாரா, தமிழ்நாட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து விட்டு உதயநிதி ஸ்டாலினை பார்த்து அனைத்து அமைச்சர்களும் கும்பிடு போட்டுக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் தான் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என சொல்வதை பார்த்து மக்கள் சிரிப்பதாக விமர்சித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கட்டும்; அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் உதயநிதி தான் சிறந்த சட்டமன்ற உறுப்பினர், அடுத்த தலைவர் என சொல்வது வேடிக்கையாக உள்ளது.
ஊழலிலே நான் பெரியவனா நீ பெரியவனா என பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுயுடன் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். மக்களுக்கு நல்லது செய்வதில் திமுக அமைச்சர்களிடம் போட்டி இல்லை, ஊழல் செய்வதில் தான் போட்டி உள்ளது அந்த போட்டியில் பத்திரப்பதிவு துறை இன்று முதலில் உள்ளது என கடுமையாக விமர்சித்தார். ஒரு சாதாரண மனிதர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பத்திரத்தை பதிவு செய்ய முடியுமா அதில் எவ்வளவு சிக்கல் உள்ளது என சாமானிய மக்களுக்கு தெரியும் எனவே இதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்