"சபரிமலை தனி வரிசையில் குழுவாக வரும் பக்தர்களை அனுப்ப முடியாது. ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் அல்லது ஒரு பாதுகாவலருக்கு மட்டும் அனுமதி என முடிவு செய்யப்பட்டுள்ளது" திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்த கோபன் சபரிமலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த 12ஆம் தேதி சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வந்தது. குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் அவதியுற்றனர். அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை சமாளிக்கும் விதமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நடைப்பந்தலில் உள்ள ஒன்பதாவது வரிசை இவர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது திருப்திகரமாக உள்ளது. தனி வரிசையில் நின்று தரிசனம் செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் தனி வரிசையில் சென்று தரிசனம் செய்வதால் சந்தோஷம் கொண்டுள்ளனர். சபரிமலை தரிசனத்திற்கு குழுவாய் வரும் ஐயப்ப பக்தர்களில், அந்த குழுவில் ஒன்றோ இரண்டோ குழந்தைகள் இருக்கலாம். அந்த குழந்தைகளுக்காக, அந்த குழுவையே தனி வரிசையில் அனுமதிக்க முடியாது.
ஒரு குழந்தையுடன், பெற்றோரில் ஒருவர் அல்லது அந்த குழந்தையின் பாதுகாவலரை, இரண்டு குழந்தைகள் என்றால் பெற்றோரில் இருவர் அல்லது இரண்டு பாதுகாவலர் என தனி வரிசையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளோடு வரும் குழுவினரை முழுவதுமாக அனுப்பினால் அந்த தனி வரிசைக்கான சிறப்பு இல்லாமல் போய்விடும். குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விடும். நீண்ட வரிசையில் காத்து நிற்கும் ஐயப்ப பக்தர்கள் இந்த தனி வரிசையில் நுழைய ஆயத்தமாகின்றனர். போலீசார் அவர்களை தடுக்கின்றனர். இதனால் சில ஐயப்ப பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படுகிறது.
தனி வரிசை குறித்து போலீசார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தனி வரிசை குறித்த மேலும் பல முடிவுகள் எடுக்கப்படும். நவம்பர் 12ஆம் தேதிக்குப் பின் திங்கட்கிழமை தான் அதிக பக்தர்களின் வருகை இருந்தது. அடுத்து வரும் நாட்களில் 90 ஆயிரத்தை ஒட்டிய பக்தர்களின் எண்ணிக்கையே தரிசனத்திற்கு முன்பதிவு ஆகி உள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கையில் 10% குறைவு உண்டாக்கலாம். எனவே பக்தர்களின் வருகையை சமாளிக்கும் சாத்தியக் கூறுகளே உள்ளது.
சபரிமலை என்றாலே புத்தர்களின் கூட்டம் என்பது இயல்பானது தான். தினத்திற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலும் எல்லா ஐயப்ப பக்தர்களுக்கும் தெரிந்ததுதான். இந்த வரிசையில் காத்திருந்து தரிசனம் என்பது புதுமை அல்ல முன் காலங்களில் அனுபவப்பட்டது தான். 148 சென்டிமீட்டர் அகலம் மட்டுமே உள்ள பதினெட்டாம் படியில் முதியவர் இயலாதோர் குழந்தைகள் என படி ஏறும் போது அதற்கான நேரம் தவிர்க்க முடியாததாகி விடும் கட்டாயம் உள்ளது.
லட்சக்கணக்கில் வரும் ஐயப்ப பக்தர்களின் தரிசனம் தாமதமாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதை புரிந்துகொண்டு தான் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அதிக நேர காத்திருப்பை தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளை ஆகியோரை மரக்கூட்டம் பகுதியில் இருந்து பிரித்து தனி வரிசையில் கொண்டுவர ஆலோசனை வழங்கப்பட்டது. போலீஸ் தரப்பில் இருந்தும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதுகுறித்து மேலும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்