கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளில் வெற்றிபெற்ற பிரான்ஸ் இங்கிலாந்து அணிகள் காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் போலந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், முதல்பாதி ஆட்டத்தில் சமபலத்துடன் களம்கண்ட இரண்டு அணிகளும் தங்கள் அணிக்காக கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை தவறவிட்டன. இந்நிலையில் முதல்பாதி ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை தொடங்கினார். இதன் மூலம் முதல்பாதி ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாஃபே ஒரு கோலும், கூடுதல் நேர ஆட்டத்தின் 90+1-வது நிமிடத்தில் மேலும் ஒருகோல் என இரண்டு கோல்களை அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதேபோல் ஆட்டத்தின் 90+9வத நிமிடத்தில் போலந்து வீரர் லெவன்டோவ்ஸ்கி ஒருகோல் அடித்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தார். ஆட்டத்தின் இறுதியில் 3:1 என்ற கோல் கணக்கில் பிரான் அணி வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதைத் தொடர்ந்த நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் பலம்வாய்ந்த இங்கிலாந்து செனகல் அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. இதில். முதல்பாதி ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹெண்டர்சன் ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். முதல்பாதி ஆட்டத்தின் 45+3-வது கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வீரர் கேன் ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சகா ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை மேலும் உறுதி செய்தார். ஆட்டத்தின் இறுதியில் 3:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியதோடு பிரான்ஸ் அணியுடன் களம்காண காத்திருக்கிறது.
இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஜப்பான் குரோசியா அணியை எதிர்கொள்கிறது. அதேபோல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் பிரேசில் தென் கொரியா அணியுடன் மோத உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்