குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 9.30 மணி நிலவரப்படி, குஜராத்தில் பாஜகவும், இமாச்சலில் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.
குஜராத்திலுள்ள 182 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தேர்தல், கடந்த டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தமாக களத்தில் நின்ற வேட்பாளர்கள் 1,621 என்றிருந்த நிலையில் அவர்களில் 4.9 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே முன்முனை போட்டி நிலவி வருகிறது. பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலமான இங்கு, தற்போது முதல்வராக பூபேந்திர படேல் உள்ளார். இவர் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இத்தொகுதி மட்டுமன்றி காங்கிரஸ் கட்சியின் ஜிக்னேஷ் மேவானி (வட்கம் தொகுதி) ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுடன் காட்வி (கம்பாலியா தொகுதி), பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா போட்டியிடும் ஜாம்நகர் (வடக்கு தொகுதி) ஆகியவை முக்கிய தொகுதிகளாக உள்ளன.
மலைப்பிரதேச மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் 412 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 55.6 லட்சம் ஆக இருந்தது. பாஜக ஆளும் மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் தற்போது முதல்வராக ஜெயராம் தாகூர் உள்ளார். இங்கும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.
குஜராத் - இமாச்சல பிரதேசங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி, குஜராத்தில் பாஜக முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 145 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 27 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இமாச்சல பிரதேசத்தில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகித்து கணிக்கமுடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாஜக 33 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் ஆம் ஆத்மிக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்து வருகிறது. இமாச்சலில் 1985க்குப் பின் ஒரே கட்சி தொடர்ந்து இரண்டு முறை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்