இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் எந்தெந்த மாநிலங்களில் அதிக தற்கொலைகள் நடந்தது என்பது குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.
2021ம் ஆண்டு நாட்டில் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக பதிவாகியிருக்கிறது. அதுவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 ஆக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 52 ஆக அதிகரித்திருந்தது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதையே இந்த புள்ளி விவரங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே அதிகபட்சமாக இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையை கொண்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே 22,207 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் 14 ஆயிரத்து 965 பேரும், நான்காவது இடத்தில் மேற்குவங்க மாநிலத்தில் 13 ஆயிரத்து 500 பேரும், ஐந்தாவது இடத்தில் கர்நாடக மாநிலத்தில் 13 ஆயிரத்து 56 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து 10,171 பேர் தற்கொலை செய்து கொண்டு தெலுங்கானா மாநிலம் ஆறாவது இடத்திலும், 9,549 பேர் தற்கொலை எண்ணிக்கையோடு கேரளா ஏழாவது இடத்திலும் உள்ளது.
எட்டாவது இடத்தில் உள்ள குஜராத் மாநிலத்தில் 8,789 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 8,067 பேர் தற்கொலை செய்து கொண்டதால் ஆந்திர மாநிலம் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும், 7,828 பேர் தற்கொலை செய்து கொண்டதால் சட்டீஸ்கர் மாநிலம் பத்தாவது இடத்திலும் உள்ளது. நாகலாந்தில் 43 பேரும், யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவில் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டு இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பை ஒப்பிடும் பொழுது 2021ஆம் ஆண்டு தற்கொலை எண்ணிக்கை சுமார் 4,000 அளவிற்கு அதிகரித்துள்ளதும் தெரிய வந்திருக்கிறது. இதுபோக, கடந்த 2017ஆம் ஆண்டு 14,459 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 13 ஆயிரத்து 896 ஆக இருந்தது.
2019 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 13 ஆயிரத்து 493 ஆக இருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு மிக வேகமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து அந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 883 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்