Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

``உதயநிதியை எப்படி அமைச்சராக்கலாம் என பலருக்கு திடீர் பாசம் வந்துள்ளது"- உதயநிதி

“அது எப்படி உதயநிதியை அமைச்சராக்கலாம் என நமது கழகத்தின் மீது பலருக்கு திடீர் பாசம் வந்திருக்கிறது. அந்தப் பாசத்திற்கு எனது நன்றிகள்” என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசினார்.

சென்னை பிராட்வே, பிரகாசம் சாலையில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 2000 நபர்களுக்கு புத்தாடை உணவுப் பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை கிழக்கு மாவட்டம் செயலாளர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது மக்களுக்கு புத்தாடைகள், உணவு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு வி க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தென்னிந்திய பேராயர்களின் தலைவர் அருட்தந்தை ஜான் ஸ்டீபன் உட்பட மாமன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

image

மேடையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “நமது கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை. `என்னை நோக்கி நீ 10 அடிகள் நடந்தால் உன்னை நோக்கி நான் 100 அடி நடந்து வருவேன்’ என பைபிளில் ஒரு வசனம் உள்ளது. அதேபோல் தான் நாம். உதவி தேடி நம்மை நோக்கி யாராவது 10 அடி நடந்தால், அவர்களுக்காக 100 அடி நடந்து வர கூடியவர் நமது முதலமைச்சர். விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி, அரசியல் எனும் கள விளையாட்டில் வெற்றி காண்பார். அவரோடு என்றும் துணை நிற்போம்” என்று கூறினார்.

image

பின்னர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசுகையில், “அதென்ன திராவிட மாடல் ஆட்சி என எல்லோரும் கேட்கிறார்கள். ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என்று கிறிஸ்தவர்களுக்கு கூறுகிறார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுதான் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், பேராசிரியர் கற்றுக் கொடுத்தது. நானும் கிறிஸ்தவன் என கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். டான் பாஸ்கோ கிறிஸ்தவ பள்ளியில் தான் நான் படித்தேன். கிறிஸ்துவ பெண்ணைதான் நான் காதலித்து மணந்தேன். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும். நான் ரம்ஜானுக்கும் வாழ்த்து சொல்வேன். ஏனெனில் நான் ஒரு இஸ்லாமியனும் கூட. எனது சேப்பாக்கம் தொகுதியை விட துறைமுகம் தொகுதிக்கு தான் அதிக முறை வந்துள்ளேன்” என்றார்.

மேலும் பேசுகையில், “அது எப்படி உதயநிதியை அமைச்சராக்கலாம் என நமது கழகத்தின் மீது பலருக்கு திடீர் பாசம் வந்திருக்கிறது. அந்தப் பாசத்திற்கு அவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் பசிக்கு கடந்த மூன்று நாட்களாக தீனி போட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார். தொடர்ந்து, “தேர்தல் சமயங்களில் மட்டும் நலத்திட்ட உதவிகள் கிடையாது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து அனைத்து உதவிகளும் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

மேலும் “புயலின் காரணமாக போன வருடம் அதிக இடங்களில் மழை பெய்தது. அதன் காரணமாக தண்ணீர் தேங்கியது. இதற்கு காரணம் கடந்த முறை இருந்த ஆட்சி. ஆனால் இந்த முறை மான்டஸ் புயலுக்கு, முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்துள்ளோம். இருந்தும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஆனால் வருகின்ற காலங்களில் அதுவும் நமது அரசாங்கம் சரி செய்யும்.

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என பெயர் பெற்றார் தமிழக முதலமைச்சர். ஆனால் நமது தலைவர் சிறந்த முதல்வராக பெயர் பெறுவதில் ஒன்றுமில்லை. மாறாக தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக பெயர் பெற செய்வது தான் முக்கியம். அதன்படி கடந்த வாரம் ஒரு மிகப்பெரிய நாளேட்டில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் தமிழகம் என வெளியிட்டுள்ளது" என்று பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்