சரியான மாற்று ஆள் கிடைத்துவிட்டால் தான் டிவிட்டர் CEO பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்ற பிரபல சமூக வலைதளமாக டிவிட்டரை விலைக்கு வாங்கியதிலிருந்து எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் சமூக ஊடகங்களில் அதிக பேசு பொருளாகி வரும் ட்விட்டர் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், "நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்" என்று கடந்த 18ஆம் தேதி ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், ”ட்விட்டர் CEO-வாக பதவி வகிக்கத்தகுந்த முட்டாள்தனமிக்க ஒருவர் கிடைத்துவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்வேன். அதற்குபின்பு, சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டுமே நான் தலைமை வகிப்பேன்” என்று தற்போது ட்வீட் செய்துள்ளார். இருப்பினும் தற்போது நடந்த கருத்துக்கணிப்பு மீதான தனது நம்பிக்கையின்மையை மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
மற்ற சமூக ஊடக நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கணக்குகள் மற்றும் போட்டி தளங்களுக்கான இணைப்புகள் ஆகியவற்றைத் தடை செய்த ட்விட்டரின் Sunday policy-ஐ புதுப்பித்த பிறகு இந்த கருத்துக்கணிப்பினை மஸ்க் வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்துக் கணிப்புக்கு 61% பேர் மஸ்க்கை பதவி விலகவேண்டுமென வாக்களித்ததால் மஸ்க் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.
— Elon Musk (@elonmusk) December 21, 2022
எப்படியாயினும், ட்விட்டர் நிறுவனத்தின் CEO பதவிலிருந்து தான் விலகுவதாக மஸ்க் கூறுவது இதுவே முதன்முறை. முன்னதாக, டெஸ்லாவின் முக்கிய பங்குதாரர்களால் தனது மற்ற வேலைகளைப் புறக்கணித்ததற்காக எலான் மஸ்க் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது ட்விட்டரின் CEO பதவியில் இருந்து விலகவிருப்பதாக கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்