கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் மொராக்கோ, போர்ச்சுகல் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன
நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் குரூப் எஃப் பிரிவில் முதலிடம் பிடித்த மொராக்கோ அணியும் - குரூப் ஈ பிரிவில் இராண்டாமிடம் பிடித்த ஸ்பெயின் அணியும் மோதின. ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் ஸ்பெயின் அணியின் வசமே பந்து இருந்தது. இருப்பினும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
மொராக்கோ அணியும் எளிதான வாய்ப்புகளில் கோல் அடிக்க தவறியது. 90 நிமிடங்கள் முடிவில் கோல் இன்றி ஆட்டம் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் மொராக்கோ வீரர்கள் முதல் 4 வாய்ப்புகளில் 3 முறை பந்தை கோல் வலைக்குள் செலுத்தினர். ஸ்பெயின் வீரர்கள் முதல் 3 பெனால்டி வாய்ப்புகளை தவற விட , மொராக்கோ 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி வெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
மொராக்கோ அணி உலக கோப்பை வரலாற்றில் காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். மேலும் உலக கோப்பை வரலாற்றில் காலிறுதிக்கு முன்னேறிய 4வது ஆப்ரிக்க அணி என்ற பெயரும் மொராக்கோவுக்கு கிடைத்துள்ளது. 1990ம் ஆண்டு கேமரூன் அணியும் , 2002ம் ஆண்டு செனகல் அணியும் , 2010ம் ஆண்டு கானா அணியும் காலிறுதி வரை முன்னேறி இருந்தன.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குரூப் ஹெச் பிரிவில் முதலிடம் பிடித்த போர்ச்சுகல் அணியும் - குரூப் ஜி பிரிவில் இரண்டாமிடம் பிடித்த சுவிட்ஸர்லாந்து அணியும் விளையாடின. இதில் போர்ச்சுகல் அணி கோல் மழை பொழிந்து சுவிட்ஸர்லாந்தை பந்தாடியது. ஆட்டத்தின் 17வது நிமிடம் , 33வது நிமிடம் , 51வது நிமிடம் , 55வது நிமிடம் , 67 வது நிமிடம் , 92வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர்கள் கோல் அடித்தனர்.
கோன்கலோ ராமோஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார். 58வது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து வீரர் மானுவல் அகான்ஜி அடித்த கோல் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இதன் மூலம் 6க்கு 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று காலிறுதிக்குள் கம்பீரமாக காலடி வைத்துள்ளது. வரும் 10ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ , போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்