ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இச்செயலில் ஈடுபட்ட நபர் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வெல்ஸ் பார்கோ என்ற பன்னாட்டு நிதி சேவை நிறுவனத்தின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டு, அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே சங்கர் மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கி விட்டதாக அவர் பணியாற்றி வந்த நிறுவனம் அறிவித்தது.
சங்கர் மிஸ்ராவை போலீசார் தேடி வந்த நிலையில், பெங்களூருவில் அவர் பதுங்கியிருந்தபோது கைது செய்து டெல்லி கொண்டு வந்தனர். அங்கு சங்கர் மிஸ்ராவை டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். சங்கர் மிஸ்ரா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்தவர் என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்கர் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சங்கர் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா 30 நாட்கள் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் மன்னிப்புக் கோரி உள்ளார். அத்துடன், ‘விமானங்களில் மது விநியோகிக்கும் எங்கள் கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: பெண் பயணி சீட்டில் சிறுநீர் கழித்தவர் கைது... பிடிபட்டது எப்படி? புகாரை மறுக்கும் தந்தை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்