சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி (CRZ) வழங்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியின் 3-வது வழிப்பாதையான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி. மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையில் இருந்து கெல்லிஸ் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாப்பூரில் இருந்து பசுமை வழி சாலை வழியாக சோழிங்கநல்லூரை இணைக்கும் அடுத்த வழித்தடம் கட்டுமான பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப் பாதை அமைப்பதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மயிலாப்பூர் மற்றும் தரமணியில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே சுரங்க ரயில் பாதை அமைப்பது தொடர்பாகவும், அடையாறு ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கோரி இருந்தது.
இந்நிலையில் மூன்றாவது வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி (CRZ) வழங்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடையாறு ஆற்றின் குறுக்கே 666 மீட்டர் நீளத்திற்கு சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அதேபோன்று தரமணியில் 495 மீட்டர் நீளத்திற்கும், மயிலாப்பூரில் 58.3 மீட்டருக்கும் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. தரமணி மற்றும் மயிலாப்பூரில் பக்கிங்காம் கால்வாய்க்கு அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான அனுமதியையும் கிடைத்துள்ள நிலையில் விரைவில் சுரங்கம் அமைக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணிக்குச் சீனா மற்றும் ஜெர்மனியிலிருந்து 23 இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன. முதல்கட்டமாகச் சீனாவிலிருந்து 2 டனல் போரிங் எந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்