ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ததில் இருந்து சவுதி அரேபியா கிளப்பான அல்-நாஸ்ர் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை பெற்றுவருகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் உடனான ஒப்பந்தமானது, அவருடைய சர்ச்சைக்குரிய நேர்காணலிற்கு பிறகு முறிவதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மான்செஸ்டர் உடனான பிரிவினை தொடர்ந்து உலகக்கோப்பையிலும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார் ரொனால்டோ. இந்நிலையில், வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுப்பதற்கான நேரம் என்று உலகக்கோப்பைக்கு பிறகு ரொனால்டோ தெரிவித்திருந்தார்.
ரொனால்டோவின் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் டிசம்பர் 30 அன்று நடந்தது. ரொனால்டோ மற்றும் அல்-நாஸ்ர் கிளப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டதாக அறிவித்தது. ஜூன் 2025 வரையிலான ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டார், இது மத்திய கிழக்கில் ஒரு தொழில்முறை கால்பந்து வீரருக்கான மிக நீண்ட ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அல்-நாஸ்ர் கிளப் ரொனால்டோவிற்கான சம்பளம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவே இல்லை.
பிபிசியின் கூற்றுப்படி, போர்ச்சுகல் இன்டர்நேஷனல் விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய ஊதியத்தைப் ரொனால்டோ பெறுவார் என்றும், அவர் ஒவ்வொரு ஆண்டும் 177 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
சவுதி அரேபியா கிளப்பான அல்-நாஸ்ருக்கு ரொனால்டோவின் வருகை அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் அல்-நாஸ்ர் கிளப் கடந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் 527 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ரொனால்டோவின் ரசிகர்கள், தொடர்ந்து அல்-நாசரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோவ் செய்து வருவதால் எண்ணிக்கையில் அவர்களின் உற்சாகம் மிகவும் பிரதிபலிக்கிறது. ரொனால்டோ பரிமாற்றத்திற்கு முன், அவர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆயிரமாக மட்டுமே இருந்தது. இந்நிலையில் தற்போது 6.2 மில்லியனாக உயர்ந்துள்ளது அல்-நாஸ்ர் ஃபாலோவர்ஸ்.
ரொனால்டோவுடன் கையெழுத்திட்டதாக அவர்கள் அறிவித்த இன்ஸ்டா பதிவு, இன்ஸ்டாகிராமில் அவர்களின் மிகவும் விரும்பப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. இது டிசம்பர் 30 முதல் 31 மில்லியன் பயனர்களால் விரும்பப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை மிகவும் வெற்றிகரமான அணிகளில் அல்-நாசரும் ஒன்றாகும். அவர்கள் 1955ஆம் ஆண்டு சவுதி அரேபிய லீக்கை 9 முறை வென்றுள்ளனர். மற்றும் அவர்கள் மூன்று கிரவுன் பிரின்ஸ் கோப்பைகள், மூன்று ஃபெடரேஷன் கோப்பைகள், ஆறு கிங்ஸ் கோப்பைகள் மற்றும் இரண்டு சவுதி சூப்பர் கோப்பைகளை வென்றுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்