இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இறுதிக்கட்டத்தில் வெளுத்து வாங்கிய நியூசிலாந்து இளம்வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், 2023 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் விற்கப்படாத வீரர்களின் பட்டியலில் உள்ளார்.
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், 7வது விக்கெட்டுக்கு களம் புகுந்த நியூசிலாந்து இளம் வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் இந்திய அணியை கதிகலங்க செய்திருந்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 78 பந்துகளில் 140 ரன்களை குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். இதில் 12 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும்.
அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை வந்த போது அவர் முதல் பந்தை சிக்சருக்கு விரட்டி இந்திய அணிக்கு பயத்தை காட்டிவிட்டார் என்றே கூறலாம். கடைசியில், இறுதி ஓவரின் 2வது பந்தில் அவர் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர்களை அவர் கூடுதலாக விளாசி இருந்தால் இந்திய அணியின் வெற்றியை தட்டிப் பறித்திருப்பார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 7 அல்லது அதற்கும் கீழான பேட்டிங் ஆர்டரில் களம் கண்டு, இரண்டு சதங்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்திருந்தார். தற்போது அதனை சமன் செய்துள்ளார் பிரேஸ்வெல். ஒருநாள் கிரிக்கெட்டில் 7 அல்லது அதற்கும் கீழான பேட்டிங் ஆர்டரில் களம் கண்டு ஒரு சதத்திற்கு மேல் அடித்த வீரராகி உள்ளார். இது இந்தியாவுக்கு எதிரான அந்த 140 ரன்களை சேர்த்த போது அரங்கேறியது.
கடந்த 10 மாதங்களுக்கு முன்னர்தான் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார் பிரேஸ்வெல். ஆரம்பத்தில் டாப்-ஆர்டர் பேட்டிங் வரிசையில் களம் புகுந்த பிரேஸ்வெல், இப்போது தலைசிறந்த ஃபினிஷராக உருவெடுத்துள்ளார். ஆஃப் ஸ்பின் பவுலிங் செய்யக்கூடிய அவர் தேவைப்பட்டால் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனித்துக் கொள்கிறார்.
இதுபோன்ற நெருக்கடியான இறுதிக்கட்டத்தில் அவர் அதிரடியாக விளையாடுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன், அவரது நான்காவது ஒருநாள் போட்டியில், அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 301 ரன்களைத் துரத்திய போது 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் கடைசி ஓவரில் 20 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார். அதேபோல் உள்ளூர் தொடரின் போட்டி ஒன்றில், 228 ரன்களைத் துரத்திய வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் அணி, 43 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், பிரேஸ்வெல் 65 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் வெலிங்டனில் பிரேஸ்வெல்லுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பயிற்சியாளர் க்ளென் போக்னால் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''நான் வெலிங்டனில் பயிற்சியாளராக இருந்தபோது பிரேஸ்வெல் எங்களுக்காக சில நம்பமுடியாத இன்னிங்ஸ்களை ஆடியதை பார்த்திருக்கிறேன். இப்போது அவர் வெளிநாட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியளிக்கிறது. பிரேஸ்வெல் அமைதியானவர். ஆனால் அவரது பேட்டிங் ஆக்ரோஷமாக இருக்கும். இதற்காக அவர் கடுமையான பயிற்சி எடுத்திருக்கிறார்.
பிரேஸ்வெல் இயற்கையாகவே லெக் சைடில் வீசப்படும் பந்துகளை வெளுத்து வாங்குபவர். இப்போது அவர் கவர் திசையிலும், விக்கெட் கீப்பருக்கு பின்னாடியும் அடிப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். பிரேஸ்வெலைப் பற்றிய வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் தொடர்ந்து தனது ஆட்டத்திறனை பட்டைத்தீட்டி வருகிறார். வேகமாக வளர்ந்து வருகிறார். அதனால் அவர் எதிர்காலத்தில் இதுபோன்ற சாதனைகளை மீண்டும் செய்ய முடியும்" என்கிறார் அவர்.
இப்படி அதிரடி ஆட்டக்காரராக திகழும் பிரேஸ்வெல் 2023 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் விற்கப்படாத வீரர்களின் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், வைட்டலிட்டி டி20 ப்ளாஸ்டு தொடரில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் பிரேஸ்வெல்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்