Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"ஈரோடு இடைத்தேர்தல்: இந்த தேர்தல் பாஜகவிற்கானது இல்லை" – அண்ணாமலை பேட்டி

“தேர்தல் ஆணையம் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணமெல்லாம் இடைத்தேர்தலில் வெளிவர தான் போகிறது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில் பாஜக சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பேசிய நிலையில், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒரே ஒருநாள் சேது சமுத்திர திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்த பின்னர் அது சாத்தியம் இல்லை என்பதால், அந்த திட்டம் பற்றி பேசுவதை திமுகவினர் நிறுத்திவிட்டனர். திமுகவின் திட்டங்கள் அனைத்தும் திடமானதாக இல்லை. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

image

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே அமைச்சர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமாவாசை அன்று நல்ல நாள் பார்த்து திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அமைச்சர்கள் படை பரிவாரத்தோடு சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இது மற்ற தேர்தலை காட்டிலும் விசித்திரமான தேர்தலாக உள்ளது.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் அறிவித்ததில் அதிருப்தியில் உள்ளார். இதை மறைப்பதற்காக திமுக கபட நாடகம் போடுகிறது. சுதந்திரத்திற்கு பின் நடந்த இடைத் தேர்தலில் 80 சதவீதம் ஆளும் கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. பணத்தை அதிகம் கொட்டி இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

image

கட்சி மூத்த தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. பாஜக அதிமுக கூட்டணியில் அதிமுக பலமான கட்சியாக உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்க வேண்டாம். கூட்டணியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இடைத் தேர்தலில் பணபலம் படைபலம் அதிகார துஷ்ப்ரயோகம் தான் வெற்றி பெறும்.

இந்த தேர்தல் பாஜகவிற்கான தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே. பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்குவதில் எங்களது பணி சிறப்பாக இருக்கும். இந்த இடைத்தேர்தல் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. அதிமுக பிரதான கட்சியாக உள்ளது. பலம் வாய்ந்த வேட்பாளரை ஆதரித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம். தேர்தல் ஆணையம் பறக்கும் படை போன்றவைகளை அமைத்தாலும் அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணம் வெளியே வரதான் போகிறது. அதை நீங்களும் பார்ப்பீர்கள்” என்றார்.

image

மேலும் பேசுகையில், “ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தினவிழா தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தை கட்சி புறக்கணிப்பதாக அறிவித்ததால், டீ செலவு மிச்சம்" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் நினைப்பதாக தெரிவித்த ஓபிஎஸ் கருத்துக்கு பதில் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்கிறேன்” என தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பு நிறைவு பெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக செங்கலை வைத்து போராட்டம் நடத்தி வருவது தொடர்பாக பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “வெறும் செங்கலை வைத்து கட்டடம் கட்ட முடியாது. சிமெண்டையும் சேர்த்து வைத்து போராட்டம் நடத்தட்டும்” என சிரித்தவாறு சொல்லிச் சென்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்