ரஞ்சி தொடரில் தொடர்ந்து சாதித்து வரும் மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பிசிசிஐ முதல் முறையாக பதிலளித்து உள்ளது.
இந்திய அணி தம்மை ஒதுக்கி வைத்தாலும், மும்பை ரஞ்சி தொடரில் பட்டையைக் கிளப்பி வருபவர், சர்ஃபராஸ் கான். சமீபத்தில்கூட டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி தொடரில் மீண்டும் ஒரு சதத்தை அடித்து இந்திய அணியை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆனாலும், அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து முதல்முறையாக நிர்வாகம் பதிலளித்துள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான புதிய தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அதன் உறுப்பினரான ஸ்ரீதரன் ஷரத், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அவர், அணியின் பட்டியலில் உள்ளார். அவருக்கான வாய்ப்பு வரும்போது, இந்திய அணியில் தேர்வு நிச்சயம் செய்யப்படுவார். தற்போது இந்திய அணியில் போட்டி அதிகமிருப்பதால், அதை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, சர்ஃபராஸ் கான் நடுவரிசை ஆட்டக்காரர். அந்த வரிசையில் இறங்கும் வீரர்கள்தான் இன்று நிறைய எண்ணிக்கையில் உள்ளனர். சிறந்த அணியைத் தேர்ந்தெடுக்கவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், கடந்த 2019-20ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் 154.66 சராசரியுடன் 998 ரன்களையும், 2021-22 ரஞ்சி சீசனில் 122.75 சராசரியுடன், 982 ரன்களையும், நடப்பு சீசனில் 89 சராசரியுடன், இதுவரை 801 ரன்களையும் எடுத்துள்ளார். அதாவது, இவருடைய சராசரி கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்ஃபராஸ் கான், இதுவரை 37 முதல்தர போட்டிகளில் 53 இன்னிங்ஸ்களில் 3400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதில், மொத்தம் 13 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார்.
இதில், ஒரு முச்சதமும் அடங்கும். இதையடுத்துத்தான், அவர் டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பார் என கடந்த ஆண்டிலேயே பேசப்பட்டது. ஆனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கும் 4 டெஸ்ட் பார்டர்-கவாஸ்கர் டிராபியிலாவது அவர் இடம்பிடிப்பார் என நம்பப்பட்டது. ஆனால் அதிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.
அவரைத் தேர்வு செய்யாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், இர்ஃபான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் தேர்வுக்குழுவைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். குறிப்பாக கவாஸ்கர், “உருவத்தை கேலி செய்யாதீர்கள். அவர் பேட் செய்துவிட்டு வெளியில் ஓய்வு எடுக்கப்போவதில்லை. ஒருவேளை, ஒல்லியான வீரர்கள்தான் வேண்டுமென்றால், ஃபேஷன் ஷோவுக்கு செல்லுங்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
சர்ஃபராஸ்கான் பருமனாக இருப்பதால்தான் இந்த விமர்சனம் வைக்கப்பட்டது. அதேநேரத்தில் அவரைப் போன்று உடல் பருமன் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர் இன்சமாம் அல் ஹுக், இலங்கை முன்னாள் வீரர் ரணதுங்கா உள்ளிட்ட வீரர்கள் உலக கிரிக்கெட் அரங்கில் சாதனை படைத்தார்கள் என்பதையும் கிரிக்கெட் வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். ஆனாலும், பிசிசிஐ அவரை தேர்வு செய்யவில்லை. இந்த விஷயத்தில் சர்ஃபராஸ் கானே, வேதனையுடன் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. இப்படியான சூழலில்தான் தற்போது பிசிசிஐ தன் நடவடிக்கைக்கு பதில் அளித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்