தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை பற்றியும், அப்போது சென்னை மக்கள் தன்னை எப்படி நடத்தினார்கள் என்பதை பற்றியும் பகிருந்துள்ளார், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான நிகழ்வான, தனது மனைவி ஹுமா அக்ரம் சம்பந்தப்பட்ட ஒரு உணர்ச்சிகரமான தருணம் குறித்து பேசியுள்ளார். வாசிம் அக்ரமின் மனைவியான ஹுமா அக்ரம், 2009ஆம் ஆண்டு அவரின் 42வது வயதில், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு காலமானார்.
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரரான வாசிம் அக்ரம், அவரது சுயசரிதையான "சுல்தான்: எ மெமோயர்" குறித்த உரையாடல் ஒன்றின் போது, தனது மனைவியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற தருணத்தில் நடந்தவற்றை, கதையாக பகிர்ந்து கொண்டார். இந்த கதை (நிகழ்வு) சிங்கப்பூரில் இருக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக லாகூரிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமான ஆம்புலன்ஸில் நிகழ்ந்ததாக குறிப்பிட்டு பேசியுள்ளார் அவர். அப்போது, ஆம்புலன்ஸ் சென்னை விமான நிலையத்தில் மறு நிரப்புதலுக்காக நிறுத்தப்பட்ட போது, தன்னிடம் விசா இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசியிருக்கும் வாசிம் அக்ரம், “மறைந்துபோன என் மனைவிக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்காக நான் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக லாகூரில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது விமானமானது எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் நிறுத்தப்பட்டது. நாங்கள் தரையிறங்கியபோது, என் மனைவி மயக்கமடைந்து விழுந்துவிட்டார். நான் அழுது கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எங்களிடம் இந்திய விசா இல்லை. இருவரிடமும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் மட்டும் தான் இருந்தது. ஆனால் விமான நிலையத்தில் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் உணர்வுபூர்வமாக பேசுகையில், “சென்னை விமான நிலையத்தில் இருந்தவர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் அனைவரும் என்னிடம் ‘விசாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்... முதலில் உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அன்போடும் அக்கறையோடும் சொன்னார்கள். கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதனாகவும், என் வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத ஒன்று அது” என அக்ரம் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தன் மனைவி ஹூமா அக்ரம் மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் என்று வருத்தத்துடன் தெரிவித்துளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்