உலகின் மர்ம தேசமாகவே அறியப்படும் வடகொரியாவில் சர்வாதிகாரத்தை மேன்மேலும் கோலோச்சி வருகிறார் கிம் ஜாங் உன். வடகொரிய அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எந்த வகையிலும் வாய் திறந்து பேசி விடக் கூடாது என்பதில் கிம் தெள்ளத்தெளிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது அவ்வப்போது வெளியாகும் சர்வதேச செய்திகள் மூலமே அறிந்துகொள்ள முடியும்.
மேலும் வடகொரியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்தவும், ஊடகங்கள் சுதந்திரமாக தத்தம் கருத்துகளை தெரிவிக்கவும் என எந்த உரிமையும் கிடையாது. அந்நாடு குறித்த செய்திகளையே அரசே விரும்பினால் மட்டுமே அதனை வெளியிட முடியும் அளவுக்கு கெடுபிடிகள் உச்சத்தில் இருக்கும்.
இதுமட்டுமல்லாமல், வடகொரியர்கள் சிறிய தவறு எதாவது செய்தால் கூட அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் நரகத்துக்கு நிகராக இருக்குமாம். தென்கொரியா உள்ளிட்ட வெளிநாட்டு படங்கள், சீரிஸ்களை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக கொடுங்கோல் ஆட்சியே வடகொரியாவில் நிலவி வரும் வேளையில் புதிதாக ஒரு உத்தரவையும் கிம் ஜாங் உன் பிறப்பித்திருக்கிறார். அது என்னவெனில், தன்னுடைய மகளின் ஜூ ஏ என்ற பெயரை எந்த வடகொரியரும் வைக்கக் கூடாது எனச் சொல்லி மக்கள் மத்தியில் புதிய புரளியை கிளப்பியிருக்கிறார்.
2009ம் ஆண்டில் கிம் ஜாங் உன்னிற்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் இருந்தாலும் இதுநாள் வரை அடைக்காப்பது போலவே குடும்பம் குறித்த ரகசியத்தை கிம் காத்து வந்தார். இந்த நிலையில்தான் அண்மையில் தனது மகளை கிம் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில்தன் மகள் ஜூ ஏ பெயரை எவரும் வைக்கக் கூடாது என்றும் அப்படி எவராவது மகளின் பெயரை வைத்திருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அதிரடி காட்டிய கிம், அந்த பெயரை இனி எவருமே வைக்க கூடாது என்றும் கூறியிருக்கிறாராம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்