பல்வேறு மொழிகளில் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார். அவருக்கு வயது 78.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்துள்ளார். காலையில் வீட்டுப் பணிப்பெண் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றும், அவரது
தொலைபேசி எண்ணுக்கும் பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் அழைப்பை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வாணி ஜெயராமின் உறவினருக்கு தகவல் அளித்ததையடுத்து, அவர் வீட்டை திறந்து பார்த்தபோது, படுக்கையறையில் கீழே விழுந்த நிலையில் வாணி ஜெயராம் உயிரிழந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வாணி ஜெயராமின் தலையில் காயம் இருந்ததாகவும், வீட்டுப் பணிப்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1945-ம் ஆண்டு தமிழகத்தின் வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராம். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி.
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி உள்ளிட்ட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட
திரைப்படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அண்மையில் குடியரசு தினத்தையொட்டி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஏராளமான விருதுகளைப் பெற்ற வாணி ஜெயராம், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் மூன்று முறை பெற்றுள்ளார்.
1971-ம் ஆண்டு ‘குட்டி’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த வாணி ஜெயராம், தமிழில் 1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் முதன்முதலாக பாடியிருந்தார். ஆனால் அந்தப் படம் வெளிவராத நிலையில், அதே ஆண்டு வெளியான ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ படத்தில் கண்ணதாசன் பாடல் வரிகளில், ஷங்கர் - கணேஷ் இசையமைப்பில் டி.எம். சௌந்திரராஜன் அவர்களுடன் இணைந்து பாடிய ‘ஓரிடம் உன்னிடம்’ பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.
அதன்பிறகு, அதே ஆண்டு வெளியான ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், வாலி வரிகளில் வெளியான ‘மலர்போல்’ என்றப் பாடலைப் பாடிய நிலையில், 1974-ம் ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் வாலி வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் வெளியான ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்றப் பாடலே அவருக்கு மிகப்பெரிய ப்ரேக் த்ரூ கொடுத்தது. அதன்பிறகு ‘மேகமே.. மேகமே’, ‘கேள்வியின் நாயகனே’, ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’, ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’, ‘ஏபிசி நீ வாசி’ உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் பின்னணிப் பாடகியாக புகழ்பெற்றார் வாணி ஜெயராம்.
எம்.எஸ்.விஸ்வநாதன், ஷங்கர் -கணேஷ், இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் என 3 தலைமுறைகளுக்கும் மேல் பாடியுள்ள வாணி ஜெயராம், 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகியாக தேசிய விருது பெற்றார். தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். திரையிசைப் பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்களையும், சில ஆல்பங்களிலும் பாடியுள்ளார்.
மலையாளத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘புலிமுருகன்’ படத்தில் வாணி ஜெயராம் பாடிய ‘Manathe Marikurumbe’ என்றப் பாடல், 90-வது ஆஸ்கர் விருதுகளுக்கான 2018-ம் ஆண்டின் பரிந்துரைப் பட்டியலில் 'ஒரிஜினல் பாடல்கள்' பிரிவில் தேர்வாகியிருந்த 70 பாடல்களில் இதுவும் ஒன்றாக தேர்வாகியிருந்தது. இந்நிலையில், வாணி ஜெயராம் மறைவுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்