பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால், இன்று காலையில் காலமான நிலையில், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவை நடிகரான மயில்சாமிக்கு, இன்று அதிகாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மறைந்த திரைக்கலைஞர் மயில்சாமிக்கு, திரைத்துறையைச்சேர்ந்த பலரும் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்:
"பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாகப்பேசும் ஆற்றல் படைத்தவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். “காமெடி டைம்” நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர்" என்றார்.
திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் .திருமதி. தமிழிசை சௌந்தரராஜன்:
”நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.
மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்:
“நகைச்சுவை நடிகர், வறியோர்க்கு உதவும் மனிதநேய மாண்பாளர், அன்புச்சகோதரர் மயில்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். தனது தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால், கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த சகோதரர் மயில்சாமி அவர்களின் இழப்புபென்பது தமிழ்க்கலையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அன்புச்சகோதரர் மயில்சாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்:
அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
டாக்டர் பாரிவேந்தர் M.P, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்:
”நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி இடத்தைப்பெற்றவர் மயில்சாமி. தனது தனித்திறமையால் நகைச்சுவை நடிப்பில் தமிழ்த்திரையுலகில் பல உள்ளங்களைக் கவர்ந்த நடிகர் மயில்சாமி அவர்கள், இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். நகைச்சுவை என்ற ஒன்றால் எப்படிப்பட்ட மனிதனின் மனமும் சமநிலைக்கு வந்துவிடும். ஒருசிலருக்கு மட்டுமே அப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வின் மூலம் மற்ற மனங்களைக் கவரமுடியும். அவர்களுள் ஒருவர் மயில்சாமி.
நகைச்சுவை நடிகர் என்பதோடு, சமூக ஆர்வலராகவும், அரசியலிலும் ஈடுபாடு உடையவர். 2021 சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர். அவரின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கின்றது. மயில்சாமி அவர்களின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்றார்.
விசிக தலைவர் திருமாவளவன்:
“#நடிகர்_மயில்சாமி அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. மேலும் பல பத்தாண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர். பிறரை மகிழ்வித்து மகிழும் தனது கலைத்திறன் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்றவர். அவரது மறைவு கலைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், கலைத்துறையினருக்கு
ஆழ்ந்த இரங்கல்” என்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர், ஜெயக்குமார்:
“சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டு மயில்சாமி. பழகுவதற்கு பாசமானவர், வயிற்றுப்பசி யாருக்கும் இருந்துவிடக்கூடாது என்று நினைப்பவர். இன்று நல்ல மனிதரை திரை உலகம் இழந்துவிட்டது” என்றார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
“நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மயில்சாமி சிறந்த மனிதநேயர், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் தாம் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு வழங்கி வந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
“நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். பழகுவதற்கு இனிமையானவர், அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர், அவரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி” என்று தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்