லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருப்பக்ஷப்பா கைது செய்யப்பட்டுள்ளார். விருப்பக்ஷப்பா முன் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
என்ன வழக்கு? யார் விசாரிக்கிறார்கள்?
கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மடல் விருப்பக்ஷப்பா. கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்வது தொடர்பாக லஞ்சம் பெற்றதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிக்கியது எப்படி?
இந்த விவகாரத்தில் முதலில் சிக்கியவர் விருப்பக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் தான். பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (Bangalore Water Supply and Sewerage Board) தலைமைக் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார் பிரசாந்த் மடல். விருப்பக்ஷப்பாவின் அலுவலகம் ஒன்றில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றபோது ஆயுக்தா போலீசாரிடம் சிக்கினார். விருப்பக்ஷப்பாவின் அலுவலகத்தில் சிக்கியதால் அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
வீடுகளில் சோதனையும் ரூ8 கோடி பறிமுதலும்
லஞ்சப் புகார் தொடர்பாக போலீசார் இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் 8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், ”பாக்கு விற்பனை மூலம் தனக்கு கிடைத்த பணம் அது” என்று எம்.எல்.ஏ விருப்பக்ஷப்பா கூறினார். தலைமறைவாக இருந்த அவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால ஜாமீன் பெற்றார். ரூ.5 லட்சம் பிணைப்பத்திரத்தின் மீது இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விருப்பக்ஷப்பா ராஜினாமா செய்தார். பாஜக தரப்பிலும் இவர் மீது கட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
என்ன சொல்கிறார் விருப்பக்ஷப்பா?
நீதிமன்றம் விருப்பக்ஷப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். “இந்த வழக்கில் இருந்து நிச்சயம் விடுதலை ஆகிவிடுவேன் என்பதில் நான் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் லஞ்சம் மூலம் பெறப்பட்டது அல்ல. அது என்னுடைய விவசாயத் தொழில் மூலம் வந்தது” என்றார் விருப்பக்ஷப்பா.
இடைக்கால ஜாமீனில் மாபெரும் வரவேற்பும்.. கைது நடவடிக்கையும்!
முன்னதாக, இடைக்கால ஜாமீன் பெற்ற போது தலைமறைவுக்குப் பின் அவர் தேவங்கிரி நகருக்குள் வந்தபோது எம்.எல்.ஏ விருப்பக்ஷப்பாவுக்கு, ஒரு ஹீரோவைப் போல் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்