ஆஸ்கர் விருது விழா மேடையில் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏன் நடனமாடவில்லை என்று ஆஸ்கர் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இந்திய தயாரிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருதை வென்றது.
இதன் மூலம் இந்தப் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ‘ஆர்.ஆர்.ஆர்.’ பெற்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்த விருதினைப் பெற்றுகொண்டனர். படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடனமாடி கலக்கியிருந்தனர். திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நடனம் மிகவும் வைரலானது. இதனால், ஆஸ்கர் விருது நேரலை நிகழ்ச்சியில், இரு நட்சத்திரங்களும் இணைந்து ஆடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில், முதலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடனமாட திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால், சில காரணங்களால் அவர்கள் இருவரும் விலகிக் கொண்டதாகவும் ஆஸ்கர் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்கபூர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாட்டு நாட்டு பாடலைப் பாடிய முன்னணி பாடகர்களான ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோருடன் இணைந்து முதலில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோரும் ஆஸ்கர் மேடையில் நடனமாடுவதாக இருந்தது. இதற்கு அவர்களுக்கு தேவையான பயண செலவு உட்பட அனைத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்ய தயாராக இருந்தோம்.
பிப்ரவரி மாதம் இது தொடர்பாக நாங்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டோம். ஆனால் அவர்கள், விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்த அதேவேளையில், நேரடியாக மேடையில் ஆடுவதற்கு தயக்கம் காட்டினர். ஏனெனில் நடன ஒத்திகை செய்ய போதுமான நேரம் இல்லாததாலும், இருவரின் தொடர் வேலைகள் காரணமாகவும் நேரலையில் நடனமாடுவதற்கு தோதுப்படவில்லை.
படத்தில் காட்டப்படும் ‘நாட்டு நாட்டு’ பாடல், இரண்டு மாதங்களாக ஒத்திகை பார்க்கப்பட்டு, அதன்பிறகு 15 நாட்களுக்கும் மேலாக படமாக்கப்பட்டிருந்தது. தற்போது நேரம் குறைவாக இருந்தது என்பதால், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரணுக்குப் பதிலாக, தொழில்முறை நடனக் கலைஞர்களை வைத்து லாஸ் ஏஞ்சல்ஸில் 18 மணிநேரம் ஒத்திகைப் பார்க்கப்பட்டு, பின்னர் ஆஸ்கர் மேடையில் அந்தக் கலைஞர்கள் நடனமாடினர்” என்று தெரிவித்துள்ளார்.
Here's the energetic performance of "Naatu Naatu" from #RRR at the #Oscars. https://t.co/ndiKiHeOT5 pic.twitter.com/Lf2nP826c4
— Variety (@Variety) March 13, 2023
டெல்லியில் பிறந்து கனடா நாட்டில் வளர்ந்தவரான ஆஸ்கர் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்கபூர், ஆஸ்கர் அகாடெமி விருது நிகழ்ச்சியுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகிறார். ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலை அரங்கேற்றுவதற்காக ‘ஆர்.ஆர்.ஆர்.’ பட கிரியேட்டிவ் குழுவுடன் இணைந்து ராஜ்கபூர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்