Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இளம் தலைமுறையை நினைத்து பரிதாபம் கொள்கிறேன்” - AI குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து

சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தருதல் என மொழி சார்ந்த செயல்பாடுகளை மிக அதிவேகமாக சாட் ஜிபிடி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் ஏஐ மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இதை முறையாக கையாளாவிட்டால் மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களின் கவனிப்புத் திறனை கையாள செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றை பயன்படுத்துகிறது. அதாவது, இந்தக் கருவியை மாணவர்களின் தலையில் மாட்டிவிட்டால் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை யார் கவனிக்கிறார்கள், யார் வேறு சிந்தனையில் இருப்பதை இந்தக் கருவி கண்டுபிடித்து விடும். மேலும் அதுகுறித்த தகவல்களை ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அனுப்பிவிடும்.

இதுதொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த வாரம் வைரலானது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘இளம் தலைமுறையை நினைத்து பரிதாபம் கொள்கிறேன். அவர்கள் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்களா? காலம் பதில் சொல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரஹ்மானின் இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள இசையமைப்பாளர் தமன் ‘முற்றிலும் உண்மை சார்’ என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்