நடைபெற்று வரும் துலிப் டிராபி சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் வடக்கு மண்டல் அணி, வடகிழக்கு மண்டல அணியை எதிர்த்து பெங்களூருவில் விளையாடி வருகிறது. இதில் வடக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் 9-ம் நிலையில் இறங்கிய ஹர்ஷித் ராணா 86 பந்துகளில் 122 ரன்கள் விளாசியதே. இவரது இன்னிங்ஸ் அணியின் தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவருக்கு வயது 21 என்பது குறிப்பிடத்தக்கது.
122 ரன்களை 86 பந்துகளில் எடுக்க முடிந்தது எப்படி எனில் அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களை விளாசியுள்ளார் ஹர்ஷித் ராணா. இவர் டெல்லியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். பவுலிங் ஆல்ரவுண்டர். ஆனால் பேட்டிங்கில் தன் அதீதத் திறமையை வெளிக்காட்ட காத்திருந்தார், அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் பின்னி எடுத்து விட்டார். இந்த இன்னிங்ஸையும் சேர்த்து முதல் தர கிரிக்கெட்டில் ஹர்ஷித் ராணா 274 ரன்களை 6 போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் 30 பவுண்டரிகள், 18 சிக்சர்கள் அடங்கும். அதாவது பெரும்பாலும் பந்துகளை பவுண்டரிகளில் டீல் செய்கிறார்.
0 கருத்துகள்