மும்பை: இந்தியாவின் அதிரடி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், ஆசியாவின் மிகப் பெரிய மிடில் ஆர்டர் பேட்டர் என்று பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கையே விதந்தோதுகிறார். இதன் மூலம் ராகுல் திராவிட், யுவராஜ் சிங் போன்றோரை அவர் கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அனைத்து வடிவங்களிலும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அதிரடி மன்னன் சேவாக், புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஆசியா முழுவதும் மிக உயர்ந்த நடுத்தர-வரிசை பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தான் என்று கூறினார்.
அதாவது சச்சினை யாரோடும் ஒப்பிட முடியாது, இவர்கள் அனைவருக்கும் மேல் தட்டில் இருக்கிறார் சச்சின் என்கிறார் சேவாக். ஒப்பிலா டெண்டுல்கர் என்கிறார். எனவே அவரை விடுத்து அதற்கும் கீழ்த்தட்டில் உள்ளவர்களையே ஒப்பிடுகிறார் சேவாக். இன்சமாம் அவரது சகாப்தத்தின் சிறந்த பேட்டர்களில் ஒருவராக இருந்தார் மேலும் இன்சமாம் உல் ஹக்கின் உயர்ந்த சாதனைகள் அதற்கு சான்றாகும் என்கிறார். இன்சமாம் உல் ஹக் 378 ஒருநாள் போட்டிகளில் 11739 ரன்களும், 120 டெஸ்ட் போட்டிகளில் 8830 ரன்களும் எடுத்துள்ளார்.
0 கருத்துகள்