சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் பக்கங்கள் விஸ்வநாதன் ஆனந்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்பதை நிரூபித்திருக்கிறது உலகக் கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவின் செயல்திறன். இறுதிப் போட்டியில் அவர், சாதாரண வீரரிடம் ஒன்றும் வீழவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்க கட்டங்களை தன்னுள் அடக்கி வைத்து உலகின் நம்பர் 1 வீரராக கோலோச்சும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனிடமே மகுடத்தை இழந்துள்ளார்.
இருப்பினும், முன்னெப்போதும் இல்லாத வகையில் மகத்துவத்திற்கு நெருக்கமாக இருக்கிறார் பிரக்ஞானந்தா. பாகுவில் முடிவடைந்த ஃபிடே உலகக் கோப்பையில் அற்புதமான செயல்திறனை பிரக்ஞானந்தா வெளிப்படுத்தியதன் மூலம் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய கேண்டிடேட்ஸ் போட்டிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளது. முக்கியத்துவமான இந்த தொடர் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறுகிறது. உலக செஸ் அரங்கில் தனது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி உள்ள பிரக்ஞானந்தாவின் பயணமானது நான்கரை வயதில் பல அரிய சாதனைகளுடன் தொடங்கியது. ஒரு கட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வழிகாட்டியாக மாற பிரக்ஞானந்தாவின் பயணம் நிலையான ஏற்றம் கண்டது.
0 கருத்துகள்